நாடு நெருக்கடியில் இருந்தபோது எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் போராடிய சந்தர்ப்பத்தில் தம்மீதும் தமது திட்டத்தின் மீதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை வைத்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தன்னுடன் இணைந்து செயற்பட்ட சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தமது பேஸ்புக் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிகொள்ள முடியாது என சிலர் நினைத்த நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கை தம்மை வலுப்படுத்தியதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோன்று, தமது வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தைக் கண்டு மாற்றத்தின் ஒருபகுதியாக இருப்பதற்கு தீர்மானித்து பயணத்தின் இடையே தம்மோடு இணைந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் தன்னுடன் இணைந்து பயணிக்க விரும்புவோரை வரவேற்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பேஸ்புக் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செழிப்பான, ஒன்றிணைந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கான விருப்பத்தைக் கொண்டுள்ள அனைவரினதும் ஒத்துழைப்பு தமக்கு அவசியமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சி அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றிணைந்து செயற்பட முன்வருவதன் ஊடாக இன்னும் பல விடயங்களை சாதிக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.