இலங்கை மின்சார சபையின் பொறியிலாளர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பாதகமான வகையில் மின்சார சட்டம் திருத்தப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த சங்கப்பிரிநிதிகள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை, மின்சக்தி சட்டத்தை திருத்தச் செய்யும் சட்டமூலம் இன்று நிச்சயம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சார விநியோகம் மற்றும் மருத்துவமனை சேவைகள் என்பவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவிற்கமைய உள்ள தத்துவங்களின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இந்த வர்த்;தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரச கூட்டுத்தாபனம், அரச திணைக்களம், உள்ளுராட்சி நிறுவனம், கூட்டுறவுச் சங்கம் அல்லது அவற்றின் கிளையொன்றினால் வழங்கப்படும் சேவைகள் வழமையான பொதுமக்கள் வாழ்வைக் கொண்டு நடத்துவதற்கு இன்றியமையாததெனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகள், பராமரிப்பு நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் அது போன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்துவித சிகிச்சைகள் மற்றும் சேவைகள் வைத்தியசாலை சேவைகளுக்கு உரித்தானதாகும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.