தலைவர்களின் எண்ணிக்கையில் அல்ல பண்புகளால்தான் முன்னேற்றம் ஏற்படும் – கம்பளை கல்லூரி விழாவில் திலகர்

0
270

இலங்கையில் ஏனைய எல்லா சமூகங்களையும் விட மலையக சமூகத்தில்தான் எண்ணிக்கை அடிப்படையில் அதிகளவான தலைவர்கள் உள்ளனர். அதே நேரம் தலைமைத்துவ குறைபாடு அதிகமே உள்ள சமூகமாகவும் மலையக சமூகமே காணப்படுகிறது. எனவே எண்ணிக்கையில் அதிகளவாக இருப்பதைவிட தலைமைத்துவ பண்புகளால்தான் சமூகத்திற்கு முன்னேற்றம் ஏற்படும் என மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.

கம்ளை இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் விழாவும் கல்லூரி அதிபர் எஸ். ரகு தலைமையில் (4/11) இடம்பெற்றது. வலயக்கல்வி பணிப்பாளர், கோட்டக்கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட சிறப்பு அதிதிகள், பெற்றோர், சமூக நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்த இந்த விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே திலகராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

காலத்திற்கு காலம் பல்வேறு வகையில் தலைமைத்துவ பண்புகள் கொண்ட தலைவர்களை நாம் கண்டிருக்கிறோம். கடவுளர்கள் கூட ஒரு காலத்தில் தலைவர்கள்தாம். கையில் வேலுடன் குறிஞ்சி நில மக்களுக்கு தலைவனாக இருந்த முருகனை நாம் கடவுளாக்கி. வழிப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். எல்லா மதங்களிலும் இது நடக்கிறது. புத்தன்,இயேசு நபிகள் எல்லோரும் நாயகர்களே. அவர்களையெல்லாம் கடவுளர்களாக்கிவிட்டு அரசியல்வாதிகளை மட்டுமே தலைவர்களாகக் கருதும் வழக்கத்தை நாம்தான் உருவாக்கிக் கொண்டோம். பாடசாலை அதிபர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் பல திறமையான முன்னெடுப்புக்களை செய்தபோதும் தலைவர்களாக கருதுவதில்லை. ஒன்றுமே செய்யாவிட்டாலும் வாக்குக் கேட்டு வென்றுவிடுவதனால் பலர் தலைவர்கள் ஆக்கப்படுகிறார்கள்.

இங்கே உங்களுக்குப் பிடித்த தலைவர்களைக் கூறுங்கள் எனக்கேட்டால் உலகத் தலைவர்களையெல்லாம் கூறுகின்றோமே தவிர உள்ளூரில் எமக்கு பக்கத்தில் இப்போதும் பல தலைமைத்துவ பண்புகளைக் கொண்ட பலர் இருந்தாலும் நாம் அவர்களை தலைவராக கருதுவதில்லை.எனவே எம்மிடையே தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக் கொள்வதும் அத்தகைய பண்புகளைக் கொண்டு செயற்படுமவர்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதும் அவசியமாகும். ஒரு விடயத்தை எடுத்தாள்வதற்கு யார் பொறுப்பினை ஏற்கன்றாரோ அவருக்கு தலைமைத்துவத்திற்கு உரிய பண்பு இயல்பாக வந்துவிடுகிறது. எனவே பொது விடயங்களில் பொறுப்பினை ஏற்க முன்வர வேண்டும். அதேபோல திறமையையும் அர்ப்பணிப்பையும் பெருக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இதில் ஒன்றைக் கைவிட்டாலும் தலைமைத்துவ பண்பு குறைந்துவிடும்.

மலையகத் தோட்டம் ஒன்றுக்கு சென்றால் அதிகளவான தலைவர்கள் தலைவிகளை அங்கு காணலாம். ஏனெனில் குறைந்தது நான்கு கட்சிகளாவது அங்கு இருக்கும். அதற்கு தலைவர்களும் தலைவிகளும் இருப்பர். இப்படியாக எண்ணிக்கையில் அதிகளவன தலைவர்களைக் கொண்ட சமூகமாக இலங்கையில் மலையக சமூகமே இருக்கிறது என்பது எனது கணிப்பு. ஆனால் தலைமைத்துவ பஞ்சம் அதிகம் நிலவும் சமூகமாகவும் மலையக சமூகத்தையே அடையாளம் காண முடிகிறது. எனவே எண்ணிக்கையில் அதிகளவாக இருப்பதைவிட தலைமைத்துவ பண்புகளால்தான் சமூகத்திற்கு முன்னேற்றம் ஏற்படும் என்பதை மனதிற்கொண்டு தலைமைத்துவ பண்புகள் நிறைந்த தலைவர்களாக உருவாகி, இன்றைய மாணவர்கள் நாளைய சமூகத்துக்கு தலைமை தாங்க வேண்டும் என வாழ்த்துகிறேன் எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here