தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற
“யாழ்ப்பாணம்-கிளிநொச்சி நீர் வழங்கல் கருத்திட்டத்தின் தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையம்” இன்றைய தினம்(02) திறந்து வைக்கப்பட்டது.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்களின் அழைப்பின்பேரில், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் 2024.08.02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ கே. என். டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி. எஸ். எம். சாள்ஸ், ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதாணி சாகல ரட்நாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. தாகியோ கொனிஷி உள்ளிட்ட வட மாகாண கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்,தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர், பொது முகாமையாளர், ஏனைய உத்தியோகஸ்த்தர்கள், சிறப்பு விருந்தினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
குறிப்பாக யாழ்ப்பாண மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வாக தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் ஆலை இத்திட்டமானது 266 மில்லியன் அமெரிக்க டொலர் ரூபாய் நிதி ஓதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 2011 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிரெஞ்சு அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் உதவியுடன் இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டம் 2011 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இத்திட்டத்தினூடாக 300,000 மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதும், இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் நகரில் 80 ஆயிரம் பயணாளர்களுக்கான சுகாதாரத்தை மேம்படுத்துவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்துரைத்த மான்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா மற்றும் வட மாகாண ஆலுநர் சாள்ஸ் ஆகியோர்களாலௌ வெகு விரைவில் இச்செயற்திட்டத்தை நிறைவுசெய்து கையளித்தமைக்கான பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.
அதாவது இது சமவெளி பிரதேசமான யாழ்ப்பாணம், குடிநீர் விநியோகத்திற்காக நிலத்தடி நீரிலே பிரதானமாகத் தங்கியுள்ளது. எனினும், அதிகளவு நீர் இறைத்தல், விவசாய இரசாயனப் பாவனை மற்றும் சுகாதார வசதிகள் இன்மை போன்ற காரணங்களால் குறித்த நிலத்தடி நீர் மாசுபடுகின்றது. தேசியமட்டத்திலான சராசரி நீர் வழங்கலின் உள்ளடக்குகையான 48% உடன் ஒப்பிடும் போது. யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்பான நீர் வழங்கல் 5% ஆக உள்ளது. மேற்கூறிய உண்மைகளை கருத்திற் கொண்டு யாழ்ப்பாண மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடல் நீரினைச் சுத்திகரிக்கும் உப்புநீக்கும் ஆலை யாழ்ப்பாண மக்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.
தாளையடி கடல் நீரை உப்புநீக்கும் ஆலை செயற்திட்டத்தில், குறைந்த கடல் உப்புத்தன்மைக்காக தளையடியில் அமைந்துள்ள இந்த ஆலை, கடல்நீரில் இருந்து 100% பாதுகாப்பான குடிநீரைத் தயாரிப்பதற்காக மேம்பட்ட RO தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இலங்கையின் மிகப்பெரிய உப்புநீக்கும் வசதியாக, இது இலத்திரனியல் செயற்பாடு, இரசாயனவியல் மற்றும் நிர்வாக முறைமைகளை ஒன்றிணைத்து, குடிநீர்த் தரத்தை வினைத்திறனுடன் கடைப்பிடிப்பதை உறுதிசெய்து, தினசரி 24 மில்லியன் லீற்றர் குடிநீரை உற்பத்தி செய்கிறது.
இந்த உப்புநீக்கும் ஆலையிக்கான செலவு 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதுடன், உற்பத்தி செலவு ஒரு கன மீட்டரிற்கு 160 ரூபாய் ஆகும். அதே நேரத்தில் வழக்கமான நன்நீர் சுத்திகரிப்பு ஆலையில் உற்பத்தி செலவு ஒரு கன மீட்டரிற்கு 40 ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எஸ் சதீஸ்