தனது சட்டபூர்வமான கடல்சார் நடவடிக்கைகளில் வெளித்தரப்பினர் தலையிட மாட்டார்கள் என எதிர்பார்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவிருக்கும் சீனக் கப்பல் தொடர்பில் இந்தியாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சீன வெளிவிவகார அமைச்சு இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, சீனாவின் கடல்சார் ஆய்வு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் துல்லியமாக கண்காணித்து அறிக்கை தருவார்கள் என சீனா நம்புகின்றது.
மேலும், கடலின் சுதந்திரத்தை சீனா எப்போதும் சட்டப்பூர்வமாக பயன்படுத்தி வருவதாகவும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய சீனக் கப்பல் எதிர்வரும் 11 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கப்பலின் வருகையை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்தியா தெரிவித்திருந்தது.
சர்ச்சைக்குரிய கப்பல் சீனாவுக்கு சொந்தமான ‘யுவான் வாங் 5’ ஆகும்.
சீனாவின் ஜியானிங் துறைமுகத்தில் இருந்து கடந்த 13 ஆம் திகதி புறப்பட்டு தற்போது தாய்வானைக் கடந்து கிழக்கு சீனக் கடலில் பயணித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.