ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட மரணதண்டனைக் குற்றவாளியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர படுகொலை தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய பொதுமன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை நேற்றுப் பிறப்பித்திருந்தது.
இதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை உடன் கைதுசெய்து, மீண்டும் மரணதண்டனைக் கைதியாகச் சிறையில் வைக்குமாறு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்த உயர்நீதிமன்றம், அதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் உதவிகளை வழங்குமாறு சட்டமா அதிபருக்கும் உத்தரவிட்டிருந்தது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது தாயார் சுமனா பிரேமச்சந்திர மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கஸாலி ஹுசைன் ஆகியோர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைச் சவாலுக்கு உட்படுத்தி மூன்று அடிப்படை உரிமை மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
அவற்றை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம் நேற்றுப் பூர்வாங்க விசாரணையின் பின்னர் மனுதாரர்கள் தரப்பு வாதங்களை ஏற்று இந்த இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியிருந்தது.