நாட்டின் பொருளாதாரத்தை தடைப்படாமல் வைத்திருக்க தேநீர் குடிக்கும் அளவை குறைத்துக்கொள்ளும்படி பாகிஸ்தான் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறைந்த எண்ணிக்கையான கோப்பைகளை குடிப்பது அதிக இறக்குமதிச் செலவை குறைக்கும் என்று மூத்த அமைச்சரான அஹசான் இக்பால் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் அந்நியச் செலாவணி கையிருப்பு மிகக் குறைவாகக் காணப்படுகிறது. அனைத்து இறக்குமதிகளுக்கும் இரண்டு மாதங்களுக்கு குறைவான காலத்திற்கே அந்நியச் செலாவணி உள்ளது.
“தேயிலையை நாம் கடனாக இறக்குமதி செய்வதால் தேநீர் அருந்துவதை ஒன்று, இரண்டு கோப்பைகளுக்குக் குறைத்துக்கொள்ளும்படி நாட்டு மக்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று இக்பால் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய தேயிலை இறக்குமதி நாடாக இருக்கும் பாகிஸ்தான் கடந்த ஆண்டில் 600 மில்லியன் டொலர்களுக்கு மேல் பெறுமதியான தேயிலையை வாங்கியுள்ளது.