தேர்தல்கள் எங்களைக் கடந்து செல்லும்  ; அரசியல் எங்களுக்கு நிரந்தரமானது

0
10
மலையகத்தில் தேர்தல் காலத்தில் மாத்திரம் உதிக்கும் திடீர் ஞானங்களையும் திடீர் புரட்சியாளர்களையும் நாங்கள் பல தேர்தல்களில் கண்டிருக்கிறோம். தேர்தல் முடிந்ததும் அந்த ஞானங்கள் மறைந்துவிடும். அந்த புரட்சியாளர்கள் ஓய்ந்து விடுவார்கள். ஆனால் நாங்கள் தொடர்ந்தும் அரசியல் செயற்பாடுகளில் இருப்பவர்கள். எங்களைத் தேர்தல்கள் கடந்து செல்லும். மலையக அரசியல் அரங்கம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளில் எதிர்கொண்ட மூன்று தேர்தல்களையும் சந்தித்து இருக்கிறது.அதே நேரம் இன்னும் 30 ஆண்டுகளுக்கான மலையக அரசியலை திசைமுகப்படுத்தியும் வருகிறது என மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் நுவரெலியா மாவட்டத்தின் உதயசூரியன் அணியின் தலைமை வேட்பாளருமான மயில்வாகனம் திலக ராஜா தெரிவித்துள்ளார்.
மலையக அரசியல் அரங்கத்தின் மூன்றாவது ஆண்டுநிறைவு நிகழ்வு கடந்த சனிக்கிழமை ( நவம்பர் 2) கண்டியில் இடம்பெற்றது. ‘3 ஆண்டுகள் 3 நிகழ்வுகள்’ எனும் மகுடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ‘உதயசூரியன்’ மலையக அணியின் தேர்தல் கொள்கைப் பத்திரத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மலையக அரசியல் அரங்கம் 2021 ஆம் ஆண்டு நான்கு நோக்கெல்லைகளை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டது. மலையகத்தில் அறிவார்ந்த அரசியல் உரையாடலை உருவாக்குவது, மாவட்ட எல்லைகளைக் கடந்து மலையக அரசியலை முன்னெடுப்பது, ஆண்களுக்குச் சமாந்திரமாக பெண்களுக்கும் அரசியலில் சமவாய்ப்புகளை உருவாக்குவது, அடுத்தத் தலைமுறைக்கான அரசியல் பாலமாகச் செயற்படுவது என்பனவே அவை யாகும்.
முதலாவது ஆண்டில் நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் காட்டப்படும் பாரபட்சத்துக்கு எதிராக நாடு தழுவிய கவன ஈர்ப்பு போராட்டத்தை நடாத்தியது. அதில் வெற்றியையும் பதிவு செய்தது. முதலாவது ஆண்டு நிறைவை ஹட்டன் நகரில் நடாத்தியதுடன் சிறு தோட்ட உரிமையை வலியுறுத்தி அரசியல் ஆய்வாளர் விக்டர் ஐவன் அவர்களைக் கொண்டு நினைவுப் பேருரையையும் நடாத்தியது. தொடர்ந்து அதனைப் பேரியக்கமாக முன்னெடுத்தும் வருகிறது.இரண்டாவது ஆண்டு நிறைவை கொழும்பிலே நடாத்தியதுடன் மலையகத்தில் தொழிற்சங்க இயக்கத்தை முன்னெடுத்த முதல்வர்களான கோ.நடேசய்யர்- மீனாட்சியம்மை தம்பதியரை ஆய்வு ரீதியாக அடையாளம் கண்ட கலாநிதி குமாரி ஜயவர்தன, அதனை மக்கள் மயப்படுத்திய அந்தனி ஜீவா ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவம் செய்தது. அந்த இரண்டு ஆண்டுகளும் ‘மலையகம்200’ இனை மையப்படுத்தி 24 உரையரங்கங்களை நடாத்தி மலையக உரிமைப் பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் ஆவணப்படுத்தி இருக்கிறோம்.
மூன்றாவது ஆண்டு நிறைவை தொழிற்சங்கத் துறவி வி.கே.வெள்ளையன் நினைவாக அவர் கல்வி கற்ற கண்டி மாநகரில் நடாத்துவதுடன் அவரது நினைவாக, நீண்டகால அரசியல் தலைமைத்துவத்துக்கான விருதினை தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி, நீண்டகால சமூக-அரசியல் செயற்பாடுகளுக்காக பழனிவேல் இராஜரத்னம், நீண்டகால ஊடக இலக்கிய பணிகளுக்காக கண்டி அ.இ.இராமன் ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவம் செய்கிறது.
இப்படியாக தொடர் அரசியல் பணிகளை முன்னெடுக்கும் மலையக அரசியல் அரங்கம் பிடிவாதமாகவே தனது பெயரில் ‘அரசியல்’ எனும் சொல்லை வைத்து இருக்கிறது. ஏனெனில், பல நிறுவனங்களும் அமைப்புகளும் வேறு சமூகப் பணிகள் செய்வதாகக் கூறிக் கொண்டு தேர்தல் வந்தவுடன் அரசியல் ஞானம் பெற்றவர்களாக திடீர் அரசியல் புரட்சியாளர்களாகிவிடுகிறார்கள். அவர்களுக்கு தேர்தல் என்பது ஒரு திருவிழா. அதனைச் செலவு செய்து கொண்டாடிவிட்டுப் போய் விடுவார்கள்.ஆனால் மலையக அரசியல் அரங்கத்தினர் நாங்கள் அரசியலில் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருப்போம். தேர்தல்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கும் ; அவ்வளவுதான். அத்தகைய தேர்தல்களில் பங்குபற்றும் எங்களை மக்கள் தெரிவு செய்யுமிடத்து ‘அதிகாரப் பகிர்வுடன் அர்த்தமுள்ள பிரஜைகளாக’ மக்களை வாழ வைப்பது எப்படி எனும் மலையகக் கொள்கைப் பிரகடனத்தை இன்றைய மூன்றாவது ஆண்டு நிறைவில் எழுத்து மூலமாக வெளியிட்டு வைக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரி, சமூக நீதிக் கட்சியின் தலைவர் நஜா மொஹம்மத் ஆகியோரும் உரையாற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here