நல்லூர் ஆலய தேர்த்திருவிழாவின்போது 30 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ள நிலையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எனும் குற்றச்சாட்டில் சிறுவன் உட்பட நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லூர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அதன்போது பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கூட்ட நெரிசல்களை பயன்படுத்தி இரண்டு தாலிக்கொடிகள் உள்ளிட்ட சுமார் 30 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஆலய உற்சவ கால பொலிஸ் பணிமனையில் 7 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை பெண்ணொருவரின் சங்கிலியை அறுக்க முற்பட்டபோது கையும் களவுமாக பெண்ணொருவர் சிவில் உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் சிக்கிக்கொண்டார்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்தவர் எனவும் , அவருடன் ஆலயத்துக்கு வருகை தந்திருந்த மேலும் மூன்று பெண்களையும் பொலிஸார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
இதேவேளை, ஆலய சூழலில் திருட்டுகளில் ஈடுபட்ட குற்றத்தில் சிறுவன் ஒருவனும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.