“சஜித் பிரேமதாஸவின் வேலைத்திட்டம் மற்றும் தொலை நோக்குப் பார்வையை மிகவும் உன்னிப்பாக ஆராய்ந்த பின்னர், அவருக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தேன்” என, முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் திலகரட்ன டில்ஷான் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தி நேற்று (20) ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“எதிர்க்கட்சித் தலைவரைச் சுற்றி ஒரு நல்ல அணி இருப்பதாகவும், ஒரு நல்ல தலைவருக்கு நல்ல அணி தேவை” என்றும் அவர் வலியுறுத்தினார்.
“தாம் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்” எனவும், “நாடாளுமன்றம் செல்ல வேண்டிய அவசியமில்லை” எனவும் அவர் குறிப்பிட்டார்.
“எவ்வாறாயினும், தேவை ஏற்பட்டால், தனது குடியுரிமையையும் தான் விலக்கிக் கொள்ளத் தயார்” எனவும், “விளையாட்டு அமைச்சர் பதவியையோ அல்லது வேறு எதனையுமோ எதிர்பார்த்து, தான் எதிர்க்கட்சியில் இணையவில்லை” எனவும் திலகரட்ன டில்ஷான் மேலும் சுட்டிக்காட்டினார்.
“நான் பெரிய தியாகம் செய்து விட்டேன். என் பிள்ளைகள் அனைவரும் அவுஸ்திரேலியாவில் இருக்கிறார்கள். கட்சி வேறுபாடின்றி, நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றே, என் குழந்தைகளையும் விட்டு விட்டு தான் இங்கு வந்தேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுக் காட்டினார்.
( ஐ. ஏ. காதிர் கான் )