மலையகப்பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழையினால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று அதிகாலை மேலும் ஒரு வான்கதவு திறக்கப்பட்டது.
இதனால் சென்கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இந்த மழை காரணமாக லக்ஷபான நீர்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், விமலசுரேந்திர நீர்தேக்கத்தின் அணைக்கட்டிற்கு மேலாக நீர் வெளியாகுவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அட்டன் ஓயா, கெசல்கமுவ ஓயா ஆகியவற்றின் ஏற்பட்ட வெள்ளமே காசல்ரீ நீர்த்தேக்க நீர்மட்ட அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகையால் குறித்த பகுதியில் நீர் நிலைக்கு அருகாமையில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்தோடு, பெய்து வரும் மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றமையினால் நீரேந்தும் பகுதிகளில் கரையோரப்பிரதேசங்களில் வசிக்கின்றவர்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.