நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்கள்

0
180

சிங்கப்பூருக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் 303 இலங்கை தமிழர்களுடன் தத்தளித்துக்கொண்டிருந்த படகை, ஜப்பான் கப்பலொன்று மீட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் பயணித்துக்கொண்டிருந்த இந்த மீன்பிடிப்படகு சேதமடைந்து ஸ்பிராட்லி தீவுகளில் தத்தளித்துக்கொண்டிருந்தது என விஎன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

மியன்மார் கொடியுடன் பயணித்துக்கொண்டிருக்கும் லேடிஆர்3 படகு ஆபத்தில் சிக்கியுள்ளது. இந்த படகு 303 இலங்கையர்களுடன் கனடா செல்ல முயல்கின்றது என தகவல் கிடைத்ததாக வியட்நாமின் கடல்சார் மீட்பு மற்றும் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் ஐந்தாம் திகதி குறிப்பிட்ட கப்பல் தென்கரையோரத்தில் உள்ள வுங் டாவுவில் இருந்து 258 கடல்மைல் தொலைவில் காணப்பட்டது . படகின் இயந்திர அறைக்குள் நீர் சென்றதால் அந்த கப்பல் தத்தளிக்க தொடங்கியது கடல் கொந்தளிப்பாக காணப்பட்டுள்ளது.

வியட்நாமின் கடல்சார் மீட்பு மற்றும் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு நிலையம் கப்பலை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளது,அந்த பகுதியில் உள்ள ஏனைய கப்பல்களுக்கு அவசர சமிக்ஞையை அனுப்பியுள்ளது. திங்கட்கிழமை அந்த பகுதியில் ஜப்பான் கொடியுடன் ஹெலியோஸ் லீடர் என்ற கப்பல் காணப்பட்டுள்ளது,படகில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை காப்பாற்றுமாறு அந்த கப்பலுக்கு உத்தரவு வழங்கப்பட்டது.

ஜப்பான் கப்பல் உடனடியாக தத்தளித்துக்கொண்டிருந்த படகைநோக்கி சென்று வேளை படகில் இருந்தவர்கள் மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டுள்ளனர்.ஜப்பான் கப்பல் படகில் இருந்தவர்களை மீட்டு அவர்களுக்கு மருத்துவகிசிச்சைகளை வழங்கியுள்ளது. வியட்நாம் மேலும் ஐந்து கப்பல்களை அந்த பகுதிக்கு அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

20 சிறுவர்கள் 19 பெண்கள் உட்பட 303 பேரும் வுங் டாவுவை சென்றடைவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை மீட்கப்பட்ட கப்பலில் இருந்த 303 பேரும் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அந்த கப்பலில் இருந்த இலங்கையர்கள் குழு தற்போது ஜப்பானிய கப்பல் மூலம் வியட்நாமுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

இவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு வியட்நாம் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடிக் கப்பல் திங்கட்கிழமை  வியட்நாம் மற்றும் சிங்கப்பூருக்கு அருகிலுள்ள கடலில் விபத்துக்குள்ளானது.

கப்பல் ஆபத்தில் சிக்கியபோது, ​​அங்கிருந்த இலங்கையர் ஒருவர் இலங்கை கடற்படை மீட்பு நடவடிக்கை மையத்தை தொடர்புகொண்டு, இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அவர்கள் இது தொடர்பாக வியட்நாம் கடற்படை மீட்பு நடவடிக்கை மையத்திற்கு தகவல் கொடுத்தனர். அப்போது வியட்நாமிய பிரதேசத்தில் இருந்து 258 கடல் மைல் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருந்ததாக வியட்நாம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here