நடைபெறாத உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு 72 கோடி ரூபாய் வீண்விரயமாம்

0
102

இந்த வருட தொடக்கத்தில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு 72 கோடி ரூபாய் வீண் விரயம் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள வார ஏடு ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று சனிக்கிழமை வெளியான அந்த வார ஏட்டின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக இதுவரை 72 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டும் பலன் இல்லாமல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் உள்ளூராட்சி சபை தேர்தலில் கோரப்பட்டிருந்த வேட்புமனுக்கள் இரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக புதிய வேட்புமனுக்கள் கோரப்படவுள்ளன.

பழைய வேட்புமனுக்களின் படி கணிசமான அளவு பணிகள் நடைபெற்றுள்ளதாகவும், அதற்காக அச்சிடப்பட்ட அதிகாரபூர்வ வாக்குச் சீட்டு அறிவிப்புக்கள் மற்றும் வாக்குச் சீட்டுக்கள் எதனையும் மறு வேட்புமனு அழைப்பில் பயன்படுத்த முடியாது என்றும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் எமது ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.

நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான மறு வேட்புமனு அழைப்பில் இதுவரையான செலவீனங்களை திருப்பிக் கொடுக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் எமது ஊடகத்துக்கு மேலும் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைக்கான வேட்புமனுக்கள் இரத்து செய்யப்பட்டால் அதுவரை செலவிடப்பட்ட பணத்தின் பயன் குறித்து எமது ஊடகம் வினவியபோதே ஆணைக்குழு உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு வரை கணிசமான அளவு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்படும் பட்சத்தில் அனைத்துப் பணிகளும் புதிதாக தொடங்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளையில், 18 வயதை பூர்த்தி செய்தவர்கள் வாக்களிப்பதற்கான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும், இது தொடர்பான அவதானிப்புக்களை சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுவை கோருவதற்கு அமைச்சரவை அண்மையில் தீர்மானித்ததாகவும், ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறையில் உள்ளதால் தேர்தல்கள் ஆணைக்குழுவால் இதுவரை பின்பற்றப்பட்ட செயற்பாடுகளை நிறுத்த முடியாது எனவும் உறுப்பினர் தெரிவித்தார்.

இதன்படி, நீதிமன்றத்தின் மற்றுமொரு தீர்ப்பு கிடைக்கும் வரை, முன்னர் கோரப்பட்ட வேட்புமனுக்களின் படி தேர்தல் நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, புதிய வேட்புமனுக்களின் பிரகாரம் மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்காக இதுவரை எழுபத்தி இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here