நவீன வாகனங்களை ஒருங்கிணைக்கும் தொழிற்சாலை ஜனாதிபதியினால் திறந்துவைப்பு

0
12

நாட்டின் வாகன உற்பத்தித் துறையில் தனித்துவமான ஒரு திருப்புமுனையை குறிக்கும் வகையில், குளியாப்பிட்டிய வெஸ்டர்ன் ஓட்டோமொபைல் அசெம்ப்ளி பிரைவேட் லிமிடெட் (WAA) நவீன வாகனங்களை ஒருங்கிணைக்கும் தொழிற்சாலையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  (17) திறந்து வைத்தார்.

தெற்காசியாவின் மிகப்பெரிய வாகன ஒருங்கிணைப்புத் தொழிற்சாலையான வெஸ்டர்ன் ஓட்டோமொபைல் அசெம்பிளி பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையை ஆரம்பிக்க, 27 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.. இந்த தொழிற்சாலையில் ஒருங்கிணைக்கப்பட்ட 15 ஆசனங்களைக் கொண்ட முதல் வாகனம் இம்மாத இறுதியில் சந்தைக்கு வர உள்ளது.

உலகளாவிய வாகனத்துறைசார் வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்ட மிக உயர்தரத்திலான சர்வதேச இயந்திரங்களுடன் பொருத்தப்பட்ட இந்தத் தொழிற்சாலை, இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

மேலும், உலகளாவிய தொழில்துறை தேவைகளுக்கு இணங்க, சர்வதேச தரத்திலான தொழிற்பயிற்சி நிறுவனமும் இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இப்பயிற்சியின் மூலம் இந்நாட்டு இளைஞர்கள் வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பும் வழங்கப்படும்.

குளியாப்பிட்டியவில் உள்ள வெஸ்டர்ன் ஓட்டோமொபைல் அசெம்ப்ளி பிரைவேட் லிமிடெட் (WAA) நவீன வாகன ஒருங்கிணைப்புத் தொழிற்சாலைக்கு இன்று பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்து பெயர்ப்பலகையைத் திரைநீக்கம் செய்து தொழிற்சாலையைத் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தொழிற்சாலையை சுற்றிப் பார்வையிட்ட ஜனாதிபதி, ஊழியர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்களை, எதிர்ப்புக்களுக்கு அடிபணிந்து, அவற்றை நிறுத்தப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேற்கத்தேய ஓட்டோமொபைல் தொழிற்சாலைக்கான பணிகள் 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதிலும், இந்தப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க எவரும் ஆதரவளிக்கவில்லை என்பதையும் ஜனாதிபதி இங்கு நினைவு கூர்ந்தார்.

நாட்டை மேம்படுத்தும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காகவே தாம் நாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, 2 வருடங்களில் நிறைவுசெய்யப்படவிருந்த இந்தத் திட்டத்திற்கு 10 வருடங்கள் பிடித்தது எனவும் இதனால் இந்நாட்டு இளைஞர்களுக்கு கிடைக்க இருந்த தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த புதிய தொழிற்சாலை குளியாப்பிட்டிய உட்பட முழு நாட்டின் பொருளாதாரத்தையும் பலப்படுத்தும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here