நானுஓயாவில் தோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்

0
148

நானுஓயாவில் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிக்கு கீழ் இயங்கும் நானுஓயா தோட்டப் பிரிவிக்கு உட்பட்ட உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக (18) நாட்களாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்ட வந்த நிலையில் (16) வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குறித்த தோட்டத்தில் அதிகாரியால் கையகப்படுத்தும் சூழ்ச்சி நடைபெற்றுக்கொண்டு இருப்பதாகவும் நன்கு வளர்ச்சி பெற்றுள்ள தேயிலை மரங்களை அழித்து அவ்விடத்தில் கோப்பி கன்றுகளை நடுவதற்கு முன் ஏற்பாடுகள் செய்தமைக்கு எதிராகவே தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக பணி செல்லாது தமது எதிர்ப்பினை தெரிவித்தனர் .

மேலும் இவ்விடயம் தொடர்பில் தோட்ட அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த ஆண் தொழிலாளிகள் தொடர்பில் தோட்ட அதிகாரியால் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்து தோட்ட தலைவர்கள் மூவருக்கு வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் குற்றம் தெரிவிக்கின்றனர்.

மேலும் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி எவ்வித உரிய தீர்மானங்களும் கிடைக்காமையால் இன்று (16) நானுஓயா பிரதான நகரில் குறித்த தோட்டத்தில் பணிபுரியும் 150ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இணைந்து கோஷங்களை எழுப்பியவாறு. எதிர்ப்பு வாசகங்கள் எழுதிய சுலோகங்களை ஏந்தியும் கையில் கோரி கருப்பு கொடி ஏந்தியும் நானுஓயா பிரதான நகரில் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

அத்துடன் தோட்ட நிர்வாகம் கொழுந்து இல்லாத காலத்திலும் அதிகமாக தேயிலை கொழுந்து பறிக்கவேண்டும் என கட்டாயப்படுத்துவதாகவும் தோட்ட அதிகாரி தெரிவிக்கும் அளவுக்கு குறைவாக பறித்தால் அரை நாள் சம்பளம் வழங்குவதாகவும் இதனால் தாம் வருமான ரீதியாகவும் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தோட்ட நிர்வாகம் தேயிலை செடிகளை முறையாக பாதுகாக்காமல் காடாக்கியுள்ளதாகவும் இத்தோட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். அத்தோடு, தேயிலை மலையினை முறையாக பராமரிக்காமல் தோட்ட நிர்வாகம் கைவிட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக மலையக அரசியல் வாதிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரிகளிடம் முறைபாடுகள் செய்தபோதிலும் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் ஆர்பாட்டகாரர்கள் தமக்கு தீர்வு கிடைக்கும் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படவுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.

நானுஓயா நிருபர் டி.சந்ரு செ.திவாகரன், ஆ.ரமேஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here