





இக்காலப் பகுதியிலே ஆசிரிய மாணவர்களின் பல்வேறு திறன்களையும், ஆற்றல்களையும், ஊக்குவிக்கவும் வளர்க்கவும் தன்னாலான பங்களிப்பினை நல்கியிருந்தார் என்பதை அவரிடம் கற்ற மாணவர்கள் மூலம் அறிய முடிகின்றது. அதே வேளை 2014ம் ஆண்டு இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டு பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆங்கில பாட விரிவுரையாளராக நியமனம் பெற்றார்.
அவர் 2019ம் ஆண்டு ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரிக்கென ஓர் கல்லூரி கீதத்தை எழுதியமை குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஓர் பணியாகும். இதற்கு அதே கல்லூரியின் சங்கீதத்துறை விரிவுரையாளர் திரு எம்;. உதயகுமாரன் அவர்கள் இசை வடிவம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2023ம் ஆண்டு “மலையகம் 200” எனும் மகுட வாசகத்து டனான நிகழ்வை ஸ்ரீபாத கல்லூரியிலே ஒழுங்கமைப்பதிலே இவரது தலைமைத்து வப்பண்பு, கலையார்வம், மற்றும் சமூக அக்கறை முதலியன துல்லியமாகத் துலங்கின என்பது மனங்கொள்ளத்தக்கது. அதே போல ஆங்கில பாடக் கற்றல்- கற்பித் தல் செயற்பாடு, ஆசிரிய பயிலுநர்களின் இணைப்பாட விதானச்செயற்பாடுகள், சமூக செயற்பாடுகள் என்பவற்றையும் முனைப்புடன் மேற்கொண்டுள்ளார்.
பயிற்றப்பட்ட ஆங்கில பாட ஆசிரியரான இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்திலே 1996ம் ஆண்டு கலைமாணி பட்டத்தினைப் பெற்று, 2007/2008 கல்வியாண்டு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலே பட்டபின் கல்வி டிப்ளோமாவையும்,களனி பல்கலைக் கழகத்திலே (2010 – 2012) மொழியியலில்( ஆங்கில மொழிமூலம்) முதுமாணிப் பட்டத்தையும் பெறறுள்ளார்.
மேலும் இவர் தனது தொழில் வாழ்க்கைக்காலத்தில் பாடத்துறை சார்ந்த வதிவிடப்பயிற்சிகளையும், தொழில் வாண்மை விருத்திக்கான மென்திறன்கள் உள்ளிட்ட பலபயிற்சிகளைப் பூர்த்தி செய்துள்ளதுடன் 2009ஆம் ஆண்டு இந்திய அரசின் புலமைப்பரிசிலினூடாக இந்தியத் தலைநகரான டில்லியில் மூன்று மாதகாலம் ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழிநுட்ப பயிற்சி செயலமர்வில் பங்குபற்றியீள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்வியியலாளர் செ.பரசுராம் அவர்கள் தமது இளம் வயது முதலே கலை இலக்கியத்துறையில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தார். அவற்றுக்கு ஆதாரங்களாக பின்வருவனற்றைக் குறிப்பிடலாம். 1983ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற இளம் எழுத்தாளர் களுக்கான பாடலாக்கப் போட்டியில் முதலாமிடம் பெற்றமை. 1992இல் ஊவா மாகாண தமிழ் கவிதைப்போட்டியில் மூன்றாமிடம் பெற்றமை.
அதே வருடம் ஊவா மாகாண சாகித்யவிழா கீதம் எழுதியமை. அதனைத் தொடர்ந்து 1993 இல் ஊவா மாகாண சபை கலாசார சேவைக் காக சாகித்திய விருதினை பெற்றுக் கொண்டமை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
நாவலப்பிட்டிய பிரதேசத்தில் இவர் வசித்த காலப்பகுதியிலே (2005 – 2014) “ஆத்மஜோதி சமய சமூகநல அமைப்பினை நிறுவி அவ் வமைப்பின் தலைவராக செயற்பட்டதோடு சிறந்த வழிகாட்டல்களையும் வழங்கி பல்வேறு சமய, சமூகநல செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.
குறிப்பாக கம்பளை கல்வி வலயத்தைச்சார்ந்த தமிழ்மொழி மூல பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கான கணித. விஞ்ஞான இலவச செயலமர்வுகள், மாதிரிப்பரீட்சைகள் என்பவற்றை ஏற்பாடு செய்து நடாத்தியமை, சித்திரப்போட்டி, கண்காட்சிகள் என்பவற்றை ஏற்பாடு செய்தமை, ஆசிரியர்களுக்கான கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளை ஒழுங்கமைத்தமை அமையத்தின் ஆண்டு விழாக்களை ஏற்பாடு செய்தமை போன்ற வறறைக் குறிப்பிடலாம்.
மேலும் பல்வேறு பொது கலை நிகழ்ச்சி களில் பட்டிமன்ற நடுவராகவும். பேச்சாள ராகவும் பங்கு கொண்டு வருகின்றமை இவருக்கேயுரிய சிறப்பு அம்சமாகும். அத்தோடு ஆசிரியர்களுக்கான கற்பித்தல் சார் செயலமர்வுகளை நடாத்துவதிலும் புலமைமிக்கவராக காணப்படுகின்றார்.
ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் கல்விசார் மற்றும் இணைப்பாடவிதான வளர்ச்சியில், தேவையான பாய்ச்சலை ஏற்படுத்திய தொடருறு கல்விக்கான உபபீடாதிபதி திரு. பரசுராம் அவர்களின் சேவையை, தலைமைத்துவ வகிபங்கினை உயர்வாக மதிப்பதோடு அவரது ஓய்வு காலம் சிறக்க கல்விச்சமூகம் சார்ந்து வாழ்வாங்கு வாழ்த்துகின்றோம்.
எம். அகிலன்
விரிவுரையாளர்,
ஸ்ரீபாததேசியகல்வியியற் கல்லூரி,
பத்தனை.