நீதிமன்ற உத்தரவின் ஊடாக தாய்லாந்து பிரதமர் Srettha Thavisin பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இலஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்தமை தொடர்பில் ஏற்கனவே 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஒருவரை அமைச்சு பதவிக்காக நியமித்தமை காரணமாக அவரை பிரதமர் பதவியிலிருந்து விலக்குமாறு கோரி செனட் சபையின் 40 உறுப்பினர்களால் கடந்த மே மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனு மீதான விசாரணை, 9 பேரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று(14) இடம்பெற்றது.
இந்த செயற்பாட்டின் ஊடாக பிரதமர் ஒழுக்கவிதிகளை மீறியுள்ளதால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டுமென ஐந்து நீதியரசர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் 9 ஆண்டு கால இராணுவ ஆட்சியை முடிவுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 62 வயதான தவ்சின் பிரதமராக பதவியேற்றார்.
16 ஆண்டுகளில் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தாய்லாந்தின் நான்காவது பிரதமராக ஷ்ரெத்தா தவ்சின் பதிவாகியுள்ளார்.
இந்நிலையில் புதிய பிரதமரை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றம் கூடும் வரை இடைக்கால தலைவர் நியமிக்கப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.