நுவரெலியா மாவட்டத்தில் நிலவுகின்ற மழையுடனான காலநிலையினைத் தொடர்ந்து கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அத்துடன் மத்திய மலை நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது.
நுவரெலியா – ஹற்றன் ,நுவரெலியா – கண்டி , நுவரெலியா -வெளிமடை போன்ற பிரதான வீதிகளிலும் ரதல்ல, நானுஓயா , டெஸ்போட் ,கந்தபளை உள்ளிட்ட பிரதேசங்களிலும் அதிக பனிமூட்டம் நிலவி வருகின்றது.
அதிகளவான பனிமூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்திக்கின்றனர்.
எனவே பிரதான வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் எச்சரிக்கையாகவும் அவதானத்துடனும் தங்களுடைய வாகனங்களை செலுத்துமாறும் , பனிமூட்டம் நிலவும் வேளையில் தங்களுடைய வாகனத்தின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்து தமக்குரிய பக்கத்தில் வாகனங்களை செலுத்த வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையிலேயே நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை செல்லும் பிரதான வீதி நானுஓயா சந்திக்கு அருகில் வீதி தாழிறங்கியுள்ளது தொடர் மழைக்காரணாமாக இந்த வீதியில் மேலும் பல இடங்களிலும் சிறிய மண்சரிவுகள் , பிரதான வீதியில் வெடிப்புக்கள் உள்ளதால் வீதியினை சீரமைக்கும் வரை அவ்வீதியினூடாக பயணங்களை மேற்கொள்ளும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறும், கனரக வாகனங்களை அவ்வீதியினூடாக செலுத்த வேண்டாம் எனவும் நானுஓயா பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். அத்துடன் இந்த பகுதி மேலும் தாழிறங்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நானுஓயா நிருபர்