இ.போ.ச பஸ் டிப்போவில், நுவரெலியாவில் கடமையாற்றிய காவலாளியை கொலைசெய்து டிப்போவில் வைப்பிலிடப்படவிருந்த சுமார் ஒன்பது இலட்சம் ரூபா பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
டிப்போவில் காவலாளியாக பணியாற்றிய நுவரெலியா கல்பாய பிரதேசத்தை சேர்ந்த கே.லோகேஸ்வரன் என்ற 85 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சிலர் காவலாளியை கொன்றுவிட்டு டிப்போவில் இருந்த அலுமாரியில் இருந்து சுமார் ஒன்பது லட்சம் ரூபாயை எடுத்துச் சென்றதாக ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
காவலாளி தனது பாதுகாப்பு அறையில் இருந்தபோது சில கும்பல் அல்லது நபர் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கி பணத்தை எடுத்துச் சென்றுள்ளதாகவும் கொலைச் சம்பவத்தின் போது, டிப்போவுக்குப் பொறுப்பான உத்தியோகத்தரும், காசாளரும் டிப்போவில் தங்கியிருந்த போதிலும், அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இந்தக் சம்பவ் இடம்பெற்றுள்ளதாக தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா இ.போ.ச பஸ் டிப்போவில் வியாழக்கிழமை (05) பிற்பகல் ஓடிய பஸ்களின் வருமானம் வங்கியில் வைப்பிலிடுவதற்காக அலுமாரியில் வைக்கப்பட்டிருந்ததாக அந்த டிப்போவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.