நுவரெலியா தபால் நிலையம் மற்றும் அதனுடன் இணைந்ததான சொத்துக்கள் தபால் திணைக்களத்தின் பாவனைக்காக மாத்திரம் பாதுகாக்கப்படும என அமைச்சர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.
வேறு எந்த நோக்கத்திற்காகவும் விடுவிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா தபால் நிலைய கட்டடத்தை முதலீட்டு திட்டத்திற்கு பயன்படுத்த கடந்த அரசாங்கத்தின் போது அனுமதி வழங்கப்பட்டதாக தபால் திணைக்களம் அறிவித்திருந்தது.
இதன்படி, அதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படுமெனவும் தபால் நிலையத்திற்கு மாற்று இடம் வழங்கிய பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர முன்னர் கூறியிருந்தார்.
இதற்கு எதிராக இலங்கையில் அனைத்து பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அத்தோடு, நுவரெலியா பிரதான தபால் நிலையத்தினை சுற்றி கருப்பு கொடி கட்டி தபால் நிலையத்திற்கு முன்பாக தபால் ஊழியர்களும் பொது மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டத்தில் இலங்கை தபால் அதிகாரி சங்கம் , இலங்கை தபால் ஊழியர்கள் சங்கம் அகில இலங்கை தபால் தந்தி ஊழியர்கள் சங்கம் மற்றும் தபால் மற்றும் தொலைத்தொடர்பு சங்கங்கள் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது