நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜரானார் அமைச்சர் ஜீவன்

0
310

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொணடமான் (29.07.2024) மதியம் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

சிரேஸ்ட சட்டத்தரணிகளான ஷான் குலத்துங்க , பெருமாள் இராஜதுறை மற்றும் சிவன்ஜோதி யோகராஜா ஆகிய சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட நகர்த்தல் மனு விசாரணைக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் மன்றில் ஆஜராகியிறுந்தார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

கடந்த (30.05.2024) அன்று நானு ஓயா உடரதல்ல தோட்டத்தில் கோப்பி பயிரிடுவது தொடர்பில் அத்தோட்ட மக்களுக்கும்,தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்டிருந்த தொழிற்சங்க பிரச்சிணைக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண நுவரெலியா மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்.

இதன்போது இடம்பெற்ற பேச்சு வார்த்தையில் இரு தரப்புகளுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டாதிருந்த நிலையில் தான் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்படபோவதாக அமைச்சரும் காங்கிரஸ் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்திருந்தார்.

அதேநேரத்தில் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும் நுவரெலியா பீட்று தோட்ட தொழிற்சாலைக்கு சென்றிருந்தார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமான் அங்கு தொழிற்சாலை நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்தார், பீட்று தோட்ட அதிகாரிகளை அறையொன்றில் வைத்து பூட்டினார்,மற்றும் தொழிற்சாலை ஊழியர்களை மிரட்டினார் என மூன்று குற்றச்சாட்டுகளை அமைச்சர் மீது சுமத்தி பீட்று தோட்ட அதிகாரி டிலும் பத்திரன என்பவரால் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் (01.06.2024) முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாட்டில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ,காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் ஏ.பி. சக்திவேல், முன்னால் நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் மற்றும் தொழிலுறவு அதிகாரி லோகதாஸ் ஆகிய நான்கு பேரின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் நுவரெலியா பொலிஸார் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களுக்கு பின் கடந்த (22.07.2024) அன்று இச்சம்பவம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையை பதில் நீதவான் ஜயமினி அமபகாவத்த எடுத்து கொண்டார்.இதன்போது மன்றில் களனிவெளி பெருந்தோட்ட கம்பனி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுர தனத்தைகொட,சட்டத்தரணி பாதித்த சுபசிங்க மற்றும் சட்டத்தரணி சுரேஷ் கயான் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

அதேநேரத்தில் குறித்த வழக்கில் பொலிஸார் நீதிமன்றுக்கு தயாரித்திருந்த வழக்கு பத்திரத்தை பதில் நீதவானின் கவனத்திற்கு சமர்ப்பித்தனர்.
இதை கவனத்திற் கொண்ட பதில் நீதவான் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை ஆகஸ்ட் மாதம் (26) ஆம் திகதி மன்றில் ஆஜர் படுத்தும்படி பொலிஸாருக்கு பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவு தொடர்பாக கம்பனி தரப்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதி மன்றத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர், இதில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சகாக்களை கைது செய்து ஆகஸ்ட் மாதம் (26) மன்றில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து நீதி மன்றத்தின் உத்தரவை மதித்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட ஏ.பி. சக்திவேல்,வேலு யோகராஜ்,லோகதாஸ் ஆகியோர் (29) மதியம் மன்றுக்கு வருகை தந்திருந்தனர்.

இவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் சமர்பித்தார் நகர்த்தல் மனுவை ஏற்றுக்கொண்ட நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரபுதிகா லங்காங்கனி விசாரணையை முன்னெடுத்தார்.

இதன்போது அமைச்சர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தை வினவினர்.அதன்போது நீதவான் குறித்த வழக்கில் சந்தேக நபர்களை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது தவிர அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கவில்லை என தெளிவாக விளக்கினார்.

அதேநேரம் இந்த வழக்கு தொடர்பில் மேலதிக விசாரணையை நுவரெலியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரால் மேற்கொண்டு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் (26) ஆம் திகதி மன்றில் அறிக்கை சமர்பிக்குமாறு
நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர்களும்,சட்டத்தரணிகள
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான் தனக்கு எதிராகவும் ஊடகங்களை திசை திருப்பியும்,பொதுமக்கள் மத்தியில் களங்கத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் சிலவும் கம்பனி தரப்பு சட்டத்தரணிகளும் தவறான கருத்தை பரப்பியுள்ளனர்.

இவ்வாறு அவதூறாக கருத்தை பரப்பியவர் எதிராக வழங்கு தொடர்வேன் என தெரிவித்ததுடன் ஊடகங்களும் சரி பிழை பார்த்து செய்திகளை வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஆ.ரமேஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here