ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நந்தன கலேபெட தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதித் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இன்று (19) மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்:
மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து ஐந்தாயிரத்து 292 ஆகும் இவர்கள் வாக்களிப்பதற்காக 534 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாளை (20) காலை 07.00 மணி முதல் நுவரெலியா மாநகர சபை மண்டபத்திற்கு பிரதம வாக்களிப்பு நிலைய உத்தியோகத்தர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டு தேவையான வாகனங்களும் அதே இடத்தில் வாக்குப்பெட்டிகளும் வழங்கப்படும்.
மேலும் அவர்களுக்கு தேவையான உபகரணங்களை நுவரெலியா காமினி தேசிய பாடசாலை மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் வாக்கு எண்ணும் நிலையங்களில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
21ஆம் திகதி மாலை 04.00 மணிக்கு மேல் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள 11 தபால் மூல வாக்கு எண்ணும் நிலையங்களில் தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளது.
அதேநேரம் அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு பின்னர் 41 நிலையங்களில் வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்.
பாதுகாப்பு நோக்கங்களுக்காக பொலிஸ் அதிகாரிகள் உட்பட 1,784 பாதுகாப்புப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.