நோர்வூட் உப பிரதேச செயலகம் முறையாக இயங்கி பொது மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்

0
295
நோர்வூட் நியூவெளி பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உப பிரதேச செயலகத்தின் ஊடாக எந்த விதமான பயனையும் பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. எனவே, அது முறையாக இயங்கி, பொது மக்களின் நியாயமான தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் ரவி குழந்தைவேலு
அம்பகமுவ பிரதேச உதவி அரசாங்க அதிபர் நந்தனவிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதில் நோர்வூட் பிதேச சபையும் ஒன்றாகும்.
அதேபோல், நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக பிரதேச செயலங்களை அமைக்க வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட போதிலும் உப பிரதேச செயலகங்களே திறந்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று நோர்வூட் நியூவெளி பிரதேசத்தில் கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இங்கு வாகன அனுமதிப் பத்திரம், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், தேசிய அடையாள அட்டை, கடவுச் சீட்டுகள் வழங்குதல் போன்ற சேவைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும் இதுவரையில் எதுவும் நடைமுறைக்கு வராமல் உள்ளமை வேதனைக்குரிய விடயமாகும். இதனால், பல கிலோ மீற்றர் தூரம் பயணித்து நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து மக்கள் அலைந்து திரிய வேண்டிய நிலையில் உள்ளார்கள்.
மஸ்கெலியா, பொகவந்தலாவ, சாமிமலை, நல்லதண்ணீர் முதலான பகுதிகளைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் தமது வேலை நாட்களை தியாகம் செய்து இவ்வாறு பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றார்கள்.
சாதாரண மக்களுக்கு இலகுவாக சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே புதிய செயலகங்கள் உருவாக்கப்பட்டன. எனினும் அவற்றின் சேவைகள் உரிய முறையில் கிடைக்காமல் உள்ளன.
எனவே, பொது மக்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் உடனடியாக சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here