பஸ்ஸை செலுத்திச் சென்ற போது சாரதிக்கு திடீரென மாரடைப்பு- நடந்தது என்ன?

0
583

பஸ்ஸின் சாரதியொருவர் தான் செலுத்திய சென்ற பஸ்ஸில், மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் நேற்று (15) மாலை பதிவாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் நுவரெலியா பிரதான பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து மாலை 3.10 மணியளவில் புறப்பட்டு தலவாக்கலை ஊடாக பத்தனை சந்தி வழியாக நாவலப்பிட்டி நோக்கி பயணிக்கும் பஸ்ஸின் சாரதியே இவ்வாறு திடீர் மாரடைப்புக்கு உள்ளாகி உயிரிழந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் சம்பவத்தில் உயிரிழந்த சாரதி இ.போ.சவுக்கு சொந்தமான நாவலப்பிட்டி டிப்போவில் பணியாற்றும் 2 பிள்ளைகளில் தந்தையான 41 வயதான ஆரத்தனகே என்பவர் என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த சாரதி கெட்டபுலா கடியலேஹின்ன பகுதியை சேர்ந்தவர் என தெரிவித்த பொலிஸார் இவர் வழமையாக நுவரெலியா பிரதான பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து நேற்று மாலை 3.10 மணியளவில் நாவலப்பிட்டியை நோக்கி பஸ்ஸை செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை சக்தியை அண்மித்த பகுதியில் தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக பஸ்ஸை வீதி ஓரத்தில் நிறுத்தியுள்ளார்.

உடனே பஸ்ஸின் நடத்துனர் சாரதி அருகே ஓடிவந்து நிலைமையை ஆராய்ந்த போது சாரதி மாரடைப்பினால் அவதியுற்றதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

பின் மாற்று வாகனம் ஒன்றில் சாரதியை அருகில் உள்ள லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து சாரதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஆ.ரமேஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here