“தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைப்பேன்” என, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
“தான் தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல், அதிகாரத்தைப் பாதுகாப்பதும் அதிகாரத்தை நிலை நாட்டுவதும் முக்கியம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, “ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி, செப்டம்பர் 22 அன்று நாடாளுமன்றத்தைக் கலைக்க, தேசிய மக்கள் கட்சி விரும்புகிறது” என்பதை உறுதிப்படுத்தும் வகையில், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமர சூரிய அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“இந்த ஊழல்வாதிகளுடன் ஒரு நாள் கூட சேர்ந்து செயற்பட விரும்பவில்லை. அதற்கான காரணங்களும் இல்லை. புதிய அமைச்சரவை மற்றும் செயலாளர்களை நியமிக்கும் அரசியலமைப்பு அதிகாரம், ஜனாதிபதிக்கு உள்ளது.
அத்துடன், செப்டம்பர் 22 அன்று தலைவர் அநுர குமார திஸாநாயக்க நம் நாட்டிற்கு சிறந்த முடிவை எடுப்பார்.
தேவையான ஏற்பாடுகளுடன் நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம்.
என். பி. பி. யின் தலைமையின் கீழ், தற்போதுள்ள அமைச்சரவை மற்றும் பிரதமர் உடனடியாக நீக்கப்படுவார்கள். இதற்குத் தேவையான அனைத்து சட்ட ஆலோசனைகளும் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன” என்றும் அமர சூரிய தெரிவித்துள்ளார்.
காதிர்கான்