மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நெடுஞ்சேனை ஆற்றங்கரையில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை (9) பொலிசார் முற்றுகையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 22 வயது இளைஞன் ஒருவரை கைது செய்ததுடன் 05 பரல் கோடா 150 போத்தல் கசிப்பு மற்றும் உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய நிர்வாக பொறுப்பதிகாரி கே.வரதராஜன் தெரிவித்தார்.
விசேட புலனாய்வு பிரிவினருக்கும் மாவட்ட குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கும் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய நிர்வாக பொறுப்பதிகாரி கே.வரதராஜன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான இன்று அதிகாலை நெடுஞ்சேனை ஆற்றுங்கரை பகுதியை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்
இதன் போது அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 22 வயது இளைஞன் ஒருவவரை மடக்கிபிடித்து கைது செய்ததுடன் 5 பரல் கோடா மற்றும் காடி போன்ற பதார்த்தங்களுடன், 150 போத்தல் கசிப்பு மற்றும் உற்பத்திக்கான உபகரணங்களை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் அண்மைக் காலமாக சட்டவிரோத கசிப்பு எனப்படும் வடிசாராயம் உற்பத்தி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.