பாரிய திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ள எல்ல சுற்றுலா வலயம் – ஜனாதிபதி தெரிவிப்பு

0
200

எல்ல சுற்றுலாப் வலயத்தை பாரிய திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

சுற்றுலா அமைச்சு, நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியன இணைந்து 4 மாதங்களுக்குள் அதற்கான திட்டத்தை தயாரித்து தன்னிடம் ஒப்படைக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

எல்ல வர்த்தகர்கள் சங்கத்துடன இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

எல்ல சுற்றுலா வலயத்தை முறையாகவும், திட்டமிட்ட வகையிலும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ரம்மியமான இயற்கைக்கு பங்கம் ஏற்படாத வகையில் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
முதற்கட்டமாக எல்ல சுற்றுலா வலயம் முறையான திட்டத்துடன் அபிவிருத்தி செய்து, அதன் பின்னர் ஊவா மாகாணம் முழுவதையும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதன்போது, எல்ல பிரதேசத்திற்கு வருகை தந்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பணிகளின் சுற்றுலா அனுபவங்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி, சுற்றுலாப் பணிகளுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.

எல்ல வர்த்தகர்கள் சங்கத்துடன் நடந்த கலந்துரையாடலில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்,

எல்ல என்பது இப்பகுதி மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு சுற்றுலாப் பிரதேசம். அது இப்போது இலங்கையின் பொருளாதாரத்திற்குப் பெருமளவில் பங்களிக்கிறது. புதிய, பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், இந்த சுற்றுலாப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கிறோம். இங்கு எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு குறுகிய காலத் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று, மாலைத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஒரு நாளைக்கு சுமார் 500 டொலர்களை செலவிடுகிறார்கள். ஆனால் எல்ல பிரதேசத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒரு நாளைக்கு இருபது டொலர்களையே செலவிடுகின்றனர். இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்த பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவை. அனுபவம் வாய்ந்த சுற்றுலாத் தொழிலாளர்கள் கடந்த கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடியின் போது நாட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள்.

500 டொலர்களை செலவழிக்கும் சுற்றுலாப் பயணிகள், நல்ல சேவையை எதிர்பார்க்கிறார்கள். அந்த சேவையை வழங்க பயிற்சி பெற்ற ஊழியர்கள் தேவை.
இந்த விரிவான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சிறந்த சுற்றுலா சேவையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊவா மாகாணத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குறைந்தது 07 நாட்களுக்கு இங்கு தங்கியிருக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here