நிதி அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இராஜினாமா செய்ய வேண்டுமென, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் தம்மிக்க பெரேரா,
நாட்டுக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. ஆனால் நிதியமைச்சர் அதனை மேற்கொள்ளவில்லை.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இனிமேல் இடமளிக்கப் போவதில்லை. அரசாங்கத்திற்கு எதிரான பொது மக்கள் போராட்டங்களுக்கு எனது ஆதரவை வழங்குவேன்.
‘இலங்கையின் நிதியமைச்சர் பேரழிவிற்கு திட்டமிடுகிறார். தற்போதைய டொலர் நெருக்கடியைத் தீர்க்கும் திட்டமோ, விருப்பமோ அவரிடம் இல்லை. இலங்கையின் பொருளாதார சவால்கள் அனைத்தும் டொலர் நெருக்கடியை அடிப்படையாகக் கொண்டதாகும். நட்பு நாடுகளிடம் கடன் வாங்கவே நிதி அமைச்சர் திட்டமிடுகிறார். நாட்டின் எதிர்கால பணப்புழக்கத்திற்கான திட்டமிடல் அவரிடம் இல்லை.’ என்று அவர் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், டொலர் வருவாய், கடன், பிணைய நிதி, கிடைக்கக்கூடிய கடன் வரிகள், அத்தியாவசியமான நிதிகள் தொடர்பான அனைத்து விடயங்களையும் நிதி அமைச்சர் தாமதப்படுத்தியுள்ளார்.
இவ்வாறான காரணங்களைக் கருத்திற் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டுமெனவும் அமைச்சர் தம்மிக பெரேரா சுட்டிக்காட்டினார்.