பிரதேச செயலக பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருவதாக பிரதமர் தினேஷ் உறுதி – முன்னாள் எம்.பி. திலகர்

0
250

நுவரெலியா மாவட்டத்தில் புதிய ஐந்து பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டபோதும் அவை முறையற்ற வகையில் முழுமையான பிரதேச செயலகமாக அல்லாமல் உப செயலகமாக அமைக்கப்பட்டமையை மறுத்து மலையக அரசியல் அரங்கம் கடந்த ஒராண்டு காலமாக பல்வேறு போராட்டங்களையும் பேச்சுவார்த்தைகளையும் நடாத்தி வந்துள்ளது. அதன் பயனாக அண்மையில் பாராளுமன்ற கலந்தாய்வு கூட்டத்திலும் இந்த விடயம் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்து இது குறித்து பேசி இருந்தத்துடன் கலந்தாய்வு கூட்டத்தின் பின்னர் இன்று மேலதிக விளக்கங்களுக்காக பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து உரையாடியபோது  பிரதேச செயலக பிரச்சினைக்கு பொது  நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக உரிய தீர்வினைப் பெற்றுத்தருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதி அளித்ததாக மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார். 

இன்று (9/11) புதன்கிழமை பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர்  அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு வழங்கி இருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. 

நுவரெலியா மாவட்டத்தில் புதிய ஐந்து பிரதேச செயலகங்கள் அமைப்பின் அநீதி குறித்து  மலையக அரசியல் அரங்கம் கடந்த ஓராண்டு காலமாக பல்வேறு போராட்டங்களையும் பேச்சுவார்த்தைகளையும் நடாத்தி வந்துள்ளது. பிரதேச செயலகங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்றகையில் ஏற்கனவே தினேஷ் குணவர்த்தனவைச் சந்தித்து குறித்த விடயம் தொடர்பாக எமது நியாய கோரிக்கையை முன்வைத்து இருந்தோம்.

  அண்மையில் பாராளுமன்ற கலந்தாய்வு கூட்டத்திலும் இந்த விடயம் விவாதிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்துக்கான பிரேரணையை முன்வைத்தவன் என்றவகையில், மேலதிக விபரங்களை கோரியிருந்த பிரதமரும் துறைக்கு பொறுப்பான அமைச்சருமான தினேஷ் குணவர்தனவைச் சந்தித்து இந்த சிக்கல் நிலை குறித்து தெளிவாக விளங்கியதுடன் எழுத்து மூலமாகவும் சமர்ப்பித்தோம்.

முன்னைய அமைச்சரினால் முழுமையான  பிரதேச செயலகங்களுக்கான வர்த்தமானி பிரகடனம் வெளியிட்டுள்ள போதும் காலி மாவட்டத்தில் அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், நுவரெலியா மாவட்டத்தில் அவை உப செயலகாமாகவும் திறக்கப்பட்டுள்ளமை பற்றி தெளிவாகப் புரிந்து கொண்டார்.

பிரதேச சபைச் சட்டத்திருத்த விடயத்திலும் எதிர்கட்சி உறுப்பினராக இருந்த காலத்திலும்  கூட தமது பூரண ஒத்துழைப்பு வழங்கியதை அவருக்கு நன்றியுடன் நினைவு கூர்ந்து இந்த விடயத்திலும் நுவரெலியா மாவட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்குமாறு வேண்டினோம்.

விடயங்களை நன்கு உள்வாங்கிக்கொண்ட பிரதமர்,  உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக தமது பதவிக்காலத்தில் இந்தப்பிரச்சினைக்கு உரிய தீர்வினை விரைவாகப் பெற்றுக் கொடுப்பதாக உறுதி அளித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here