ஜனாதிபதி பதவியில் இருந்து நாளை மறுநாள் புதன்கிழமை விலகுவதாக கோட்டாபாய ராஜபக்ச அறிவித்தது எதற்காக என்று சிங்கள இணையத்தளம் ஒன்று காரணத்தை கண்டுபிடித்துள்ளது.
இது தொடர்பாக அந்த இணையத்தளம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக கட்சித் தலைவர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளதாக தெரியவருகின்றது.
நாடாளுமன்றத்தை போயா நாளான புதன்கிழமை கூட்ட முடியாது என்பதால், கோட்டா பதவி விலகியதன் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அன்றைய நாள் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என்று கட்சித் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த திட்டம் மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட குழுவினருடன் கலந்துரையாடப்பட்டதாக கட்சித் தலைவர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நாடாளுமன்றத்தை கூட்டி ஜனாதிபதி பதவி விலகுவதற்கு முன்னர் பிரதமர் பதவி குறித்து இறுதித் தீர்மானத்தை எடுக்குமாறு சபாநாயகரை வற்புறுத்துவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
புதிய பிரதமரை நாளை நாடாளுமன்றம் நியமிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் தெரிவிக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்துக் கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிய வருகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.