இந்த அரசாங்கத்திடமும் பெருந்தோட்ட வீடமைப்புக்கு பொறுப்பாக இருக்கின்ற அமைச்சரிடமும் ஒரு முக்கியமான வினயமான கோரிக்கையை முன் வைக்க விரும்புகிறேன். மலையக பெருந்தோட்ட பகுதிகளில் நான் அமைச்சராக இருந்த காலத்தில் வீடுகள் நிர்மானிக்கப்பட்டன. குறித்த வீடமைப்பு திட்டங்களில் சிலவற்றுக்கு தற்போது மாதாந்த அடிப்படையில் பணம் மீள அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சில பயனாளிகள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.
இன்று காணப்படும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெறுகின்ற மாதாந்த சம்பளம் அவர்களுடைய உணவு தேவையை பூர்த்தி செய்வதற்கு கூட போதுமானதாக இல்லை என பழனி திகாம்பரம் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்நிலையில் மாதாந்தம் 3000 இலிருந்து 5000 ரூபாய் வர வீட்டுக் கடன் அறவிட முயற்சிப்பது அவர்களை பாரிய சிக்கலுக்குள் உள்ளாக்கும் செயற்பாடு ஆகும்.
எனவே இந்த வீட்டு திட்டத்திற்கான கட்டண அறவீடு நடவடிக்கையை உடனடியாக இடை நிறுத்துமாறு நான் மிகவும் தயவுடன் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் வரவு செலவு திட்டத்தில் தங்களுக்கு ஏதேனும் நிவாரணம் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்தனர்.
எரிபொருள் விலை அதிகரிப்பு, போக்குவரத்து கட்டண அதிகரிப்பு, மின்சார கட்டண அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு என மக்கள் மீது பாரிய சுமை சுமத்தப் பட்டுள்ளது.
அரச ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அன்றாடா தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்குகூட போதிய வருமானம் இல்லை.
தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு கோதுமை மா, மண்ணெண்னை, அரிசி, பருப்பு போன்ற பொருட்களை நிவாரணமாக வழங்குமாறு கோரிக்கை முன்வைத்தும் அது நடக்கவில்லை.
வரி அறவிடும் போது அது வருமானம் குறைந்த ஏழை மக்களை பாதிக்காதவாறு அமைய வேண்டும். ஆனால் நமது நாட்டில் அனைவருக்கும் ஒரே வகையான வரி அறவிடப்படுவது நியாயமற்ற விடயமாகும். குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித நிவாரணமும் இல்லை.
நாட்டில் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் வாழ்கின்ற போதும் அதில் சுமார் 5 லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் எவ்வித முன்னேற்றமும் இன்றி வாழ்ந்து வருவது கவலை அளிக்கிறது.
இவர்கள் அனைவரும் தேயிலை, இறப்பர் போன்ற தொழில் துறையை நம்பி வாழ்க்கையை நடத்துகின்றனர். ஆயிரம் ரூபா சம்பள விடயத்திலும் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டனர்.
18 கிலோவிற்கு மேல் கொழுந்து பறிக்குமாறு தொழிலாளர்கள் கம்பனிகளால் துன்புறுத்தப்படுகின்றனர். அதனால் விரக்தி அடையும் தொழிலாளர்கள் தோட்டத்தில் இருந்து வெளியேறி கொழும்பு மற்றும் வெளிநாட்டிற்கு செல்கின்றனர்.
இதனால் பெருந்தோட்ட தேயிலை துறை அழிவடையும் நிலைக்குச் செல்கிறது. 25 சதவீத சிறுதோட்ட உரிமையாளர்கள் 75 சதவீதம் தேயிலை ஏற்றுமதி செய்கின்றனர்.
ஆனால் 75 சதவீத பெருந்தோட்டத் துறை கம்பனிகள் 25 சதவீத தேயிலை மாத்திரமே ஏற்றுமதி செய்கின்றனர். இதற்கு காரணம் பெருந்தோட்டத்துறை மறு சீரமைப்பு செய்யாமையே ஆகும்.
தேயிலைத் தோட்டங்கள் உரிய பராமரிப்பு இன்றி காடுகளாக மாறி உள்ளன. வன விலங்குகளின் இருப்பிடமாக சில தேயிலை மலைகள் மாறியுள்ளன. சிறுத்தை போன்ற விலங்குகள் மக்கள் குடியிருப்புகளுக்கு சரளமாக வந்து செல்லும் நிலைமை காணக்கூடியதாக இருக்கிறது.
இத்தகைய நிலைமையினை தொடர்ந்தும் வேடிக்கை பார்ர்துக்கொண்டு அமைதிகாக்க முடியாது. எனவே எமது மக்களையும் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கான வேலைத் திட்டங்களை செயற்படுத்துமாறு நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இந்த வரவு செலவுத் திட்ட உரையிலும் கௌரவ ஜனாதிபதி அவர்களிடம் நாம் அதே கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறோம். ஜனாதிபதி பெருந்தோட்ட மக்களின் நிலையை நன்கு அறிந்தவர்.
பெருந்தோட்டங்களை மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரித்து வழங்குங்கள். அவர்கள் சிறந்த அனுபவம் வாய்ந்தவர்கள். தோட்டங்களை முறையாக பராமறிப்பர்.
அதிகளவு கொழுந்து பறித்து நாட்டின் தேயிலை ஏற்றுமதியை அதிகரிப்பர்.
அதன்மூலம் நாட்டுக்கு அதிகளவு டொலர்களை கொண்டுவர முடியும். அத்துடன் அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும். எனவே ஜனாதிபதி இந்த திட்டத்தை செயற்படுத்தினால் அவருக்கு பூரண ஆதரவை வழங்கத் தயாராக உள்ளோம்.
மேலும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மலையக மக்கள் சார்பாக எவ்வித அபிவிருத்தி திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை.
உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கான நிதி வளங்கள் இல்லை என்பதை நாமும் ஏற்றுக்கொள்கின்றோம்
தமிழ் முற்போக்கு கூட்டணி முயற்சியில் தற்போதைய ஜனாதிபதி பிரதமாக இருந்தபோது இன்று பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற வஜிர அபேவர்தன அவர்கள் வெளியிட்ட பிரதேச செயலகங்கள் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. பிரதேச செயலகங்கள் உப பிரதேச செயலங்களாகவே இயங்குகின்றன. இது தொடர்பில் இதற்கு முன்பும் பாராளுமன்றத்தில் சுட்டிகாட்டி உள்ளோம். எனவே குறித்த வர்த்தமானியில் குறிப்பிட்ட பிரதேச செயலகங்கள் செயற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பொறுப்பான அமைச்சரே இன்று பிரதமராகவும் உள்ளார். அவரிடமும் இந்த விசேட கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
எனக் அமைச்சு காலத்தில் வீடுகள் பல கட்டப்பட்டு மக்கள் குடி அமர்த்தப்பட்டுள்ள போதும் அந்த வீடுகளுக்கான காணி உறுதி பத்திரங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.
சர்வதேச நாணய நீதியத்தின் தேவைக்காக முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டமாக இதனை பார்க்க முடிகிறது. வரவு செலவு திட்டத்தின் மூலமாக ஏதாவது நிவாரணம் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கின்றேன் என்றார்.