நல்லாட்சி அரசில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அயராத முயற்சியால் பெருந்தோட்டப்பகுதிகளுக்கும் சேவை செய்யும் வகையில் பிரதேசசபை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது அவ்வாறான போதிலும் நோர்வூட் பிரதேசசபையை பொறுப்பேற்ற நீங்கள் இதுவரை காலமும் ஒரு ஆணியையேனும் பெருந்தோட்டங்களுக்கு வழங்கவில்லை .
இவ்வாறான நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான பாதீட்டை ஆதரிக்ககோருவது நகைப்புக்குறியதென நோர்வூட் பிரதேசசபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்ககத்தின் இளைஞர் அணித்தலைவருமான பா.சிவணேசன் கேள்வி எழுப்பினார்.
நோர்வூட் பிரதேசசபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை தொடர்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 06/12/2022 அன்று நோர்வூட் பிரதேசசபை தலைவர் ரவி குழந்தை வேலு தலைமையில் இடம்பெற்ற சபையமர்வில் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் பேசுகையில் அவர் மேலும் தெரிவித்தாவது…
தலைவர் அவர்கள், நோர்வூட் பிரதேசசபை உறுவாக்கத்தில் முன்னின்று பெற்றுக்கொடுத்த தலைவர் திகாம்பரம் உள்ளிட்ட முற்போக்கு கூட்டணி தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு பெருந்தோட்ட மக்களுக்கு சேவையாற்றக்கூடிய வகையில் சட்ட திருத்தத்தை கொண்டுவந்த பெருமையும் அவர்களையே சாரும் ஆனால் சபையை பெறுப்பேற்ற நீங்கள் இதுவரை காலமும் பெருந்தோட்ட மக்களுக்கு சபையினூடாக சேவை செய்ய முயற்சியேனும் செய்யவில்லை.
எனவே, நகர் பகுதிகளுக்கு செய்த சேவைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு பெருந்தோட்டங்களை கண்டுகொள்ளாத நோர்வூட் பிரதேசபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டிற்கு எனது எதிர்பினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.