நீர்கொழும்பு கடற்கரையில் உள்ள ஹோட்டல் ஒன்றில், நேற்று (27) இரவு இடம்பெற்ற ‘பேஸ்புக் குழு’ விருந்துபசாரத்தில் ‘ஹெரோயின், கஞ்சா’ மற்றும் ‘சட்ட விரோத சிகரெட்டுக்களுடன்’ வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கலால் திணைக்களத்தின் மேல் மாகாண உதவி ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கலால் வரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறியின் பணிப்புரையின் பேரில், உதவி ஆணையாளர் அலுவலகத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கலால் திணைக்களத்தினால் அமுல்படுத்தப்படும் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ், குறித்த சுற்றிவளைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்போது கைது செய்யப்பட்டவர்கள், 19 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர்களில் தனியார் பல்கலைக் கழக மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு தொழில் செய்பவர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குழுவில் 10 இளம் பெண்களும், 33 இளைஞர்களும் இருந்துள்ளனர்.
முகநூல் ஊடாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு வந்துள்ள இவர்கள் தங்காலை, மாரவில, கிரிந்திவெல, ஹிகுராக்கொட, பூகொட, நீர்கொழும்பு, ஜா எல, திகன, ஹொரண ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என்பதாகவும் தெரியவந்துள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )