நாடளாவிய ரீதியில் உள்ள மாணவர்களுக்கிடையே போஷாக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ள தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் போஷாக்கிண்மையில் தோட்ட பாடசாலைகளில் உள்ள மாணவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அட்டனில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
மாணவர்களுக்கிடையே நிலவும் போஷாக்கிண்மைக் குறித்து அரசு கவனம் செலுத்தாதுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 43 இலட்சம் மாணவர்கள் இருக்கின்ற போதும் அதில் 11 இலட்சம் மாணவர்களுக்கு கல்வி அமைச்சு மூலம் உணவுத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அதுவும் தலா ஒரு மாணவருக்கு 100 ரூபா மாத்திரம். இது எவ்வாறு சாத்தியப்படும்.
29 இலட்சம் மாணவர்களுக்கு போசாக்கு அவசியம் என யுனிசெப் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையையும் இங்கு நினைவு படுத்த விரும்புகின்றேன். போஷாக்கிண்மையால் மாணவர்கள் பாடசாலைக்கு வருகைத் தருவதும் குறிப்பாக பெருந்தோட்டப்பகுதியில் குறைவடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.
பெருந்தோட்டப்புற மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு பெரிதும் முகங்கொடுத்துள்ள நிலையில் பிள்ளைகளின் போஷாக்கு நிலைமையை கவனிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
ஆகையால் பெருந்தோட்ட மாணவர்களிடையே அதிகளவு மந்த போஷாக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக அட்டன், நுவரெலியா கல்விவலயத்தை எடுத்தக்கொண்டால் இப்பகுதியில் போஷாக்கிண்மையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்பிலான எந்தவொரு புள்ளவிபரத்தையும் கூட எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இது எந்தவகையில் சாத்தியம்?
போசாக்கு பிரச்சினை எதிர்கால மாணவர்களின் கல்வியை பெரிதும் பாதிக்கும். ஆகையால் அரசு இது குறித்து முறையான திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றார்.
எம்.கிருஸ்ணா