முன்னாள் தேர்தல் ஆணைக்குழு தலைவரான மகிந்த தேசப்பிரியவை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக மீண்டும் நியமிக்க முயற்சிகள் இடம்பெறுவதாக சிங்கள வார ஏடொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான அரசியல் பத்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முன்னாள் தேர்தல் ஆணைக்குழு தலைவரான மகிந்த தேசப்பிரியவை மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக சில தரப்பினர் ஊடாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் 22 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம் அரசாங்கம் நினைத்த விதத்தில் தலைவர்களை நியமிக்கும் வாய்ப்பு இல்லை. மாறாக அந்த நியமனங்களை மேற்கொள்ளும் போது எதிர்கட்சித் தலைவருடன் அரச தலைவர் கலந்தாலோசிக்க வேண்டும்.
“தமது விருப்பத்திற்கேற்ப ஆணைக்குழுவின் தலைவர்களை பதவி நீக்கம் செய்ய அரசாங்கம் தயாராகுமானால் அவர்களின் ஆட்டத்திற்கு நாம் இடமளிக்க மாட்டோம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை நீக்க அரசாங்கம் தயாராகி வருவதாக சஜித் கருத்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது தேர்தல் ஆணைக்குழு தலைவராக உள்ள நிமல் புஞ்சிஹேவா, சஜித்துக்கு தொலைபேசியில் அழைப்பு எடுத்து, தனக்கு ஆதரவாக அறிக்கை விடுத்தமைக்கு நன்றி தெரிவித்து உள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.