இவ்விசேட சபை அமர்வில் மாநகர பிரதிமுதல்வர், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், மாநகர பிரதி முதல்வர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மாநகர முதல்வரினால் 2023ம் ஆண்டுக்கான பாதீட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன், உறுப்பினர்களின் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று இறுதியில் பதீட்டின் மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.
வாக்கெடுப்பின் போது பாதீட்டுக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும், நடுநிலையாக 02 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இரண்டு உறுப்பினர்கள் வெளிநாட்டுப் பயணம் காரணமாக சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை.
இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாநகரசபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு 08 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதுடன், 2018 முதல் இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டு வாக்கெடுப்புகளில் தோல்வியுறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், மட்டக்களப்பு மாநகரசபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீட்டில்; பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் உட்பட மனித நேய செயற்பாடுகளுக்கும் விசேட நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநகரசபையின் வட்டார ரீதியான அபிவிருத்திப் பணிகளுக்காக 181 மில்லியன் நிதி ஒதுக்கீடு இம்முறை மாநகரசபைப் பாதீட்டில் ஒதுக்கிடப்பட்டுள்ளதுடன், விசேட செயற்பாடுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில், மட்டக்களப்பு மாநகரசபையில் பணிபுரியும் ஊழியர்களின் பிள்ளைகளின் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பிற்கு மாதாந்தம் நிதி ஒதுக்கத்திற்காக பாதீட்டில் உள்வாங்கப்பட்டுள்ளது. மாநகரசபையில் பணிபுரியும் ஊழியர்களின் பிள்ளைகள் வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படின் மாதாந்தம் ரூபா 5000.00 உம், மாவட்டத்திற்கு வெளியிலுள்ள பல்கலைக்கழமொன்றிற்குத் தெரிவு செய்யப்படின் மாதாந்தம் ரூபா 8000.00 உம் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் பாதீட்டில் உள்வாங்கப்பட்டுள்ளன. பிள்ளைகளின் பல்கலைக்கழகப் படிப்பு நிறைவுறும் வரை இத்தெகை வழங்குவதற்குரிய ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேவேளை மாநகரசபை உறுப்பினர்களுக்கான ஒதுக்கத்திற்கும் மேலாக பொதுவான செயற்பாடுகளுக்காக விசேட நிதி ஒதுக்கீடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி மாநகரசபை உறுப்பினர் கௌரி அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக பொது நிதியத்தில் இருந்து பெண்கள் நலனசார்ந்த திட்டங்களை அழுல்ப்படுத்துவதற்காக விசேட நிதி ஒதுக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் சிறுவர் சிநேக அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காகவும் விசேட நிதி ஒதுக்கம் மேற்கொள்ளப்படடுள்ளது. பிள்ளைகள் பிறந்து ஓரிரு வயதிற்குள்ளேயே அவர்களின் மூளை வளர்ச்சி அதிவேகமாக இருப்பதன் காரணமாக விசேடமாக இம்முறை ஒன்று இரண்டு வயது குழந்தைகளுக்காக விளையாட்டு வாசிகசாலையொன்றை அமைப்பதற்கான செயற்திட்டமொன்றும், கருவுற்ற தாய்மார் நல்ல விடயங்களைக் கேட்பதற்கான சிறந்த துறைசார்ந்த நிபுனர்களின் நெறிப்படுத்தலுக்கு அமைவாகத் தயாரிக்கப்பட்ட காணெளி கருவுற்ற தாய்மாருக்கு வழங்கி அவர்கள் நல்ல ஆரோக்கியமான பிள்ளைகளைப் பெற்றெடுப்பதற்கான செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்கான திட்டங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.