மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ள தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயத்தை தேவாலேகந்த பிரதேசத்தில்; அமைப்பட்டுள்ள பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.
மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ள தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயத்தை தேவாலகந்த பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாற்று இடத்திற்கு கொண்டு செல்வது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் (27) சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
1999 ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் மேற்படி தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயத்தின் ஒரு பகுதி மண்சரிவில் பாதிக்கப்பட்டது. இதனைணடுத்து தெஹியோவிட்ட களனிவெளி தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேவாலகந்த பிரதேசத்தில் இப்பாடசாலையை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்கமைய 02 ஏக்கர் காணி வழங்கப்பட்டதுடன் அதில் 440 இலட்சம் ரூபா செலவில் புதிதாக மூன்று மாடி கட்டிடம் அமைக்கப்பட்டது. அதில் 11 வகுப்பறைகளை கொண்டுள்ளதுடன், இதற்கு மேலதிகமாக அலுவலகம் மற்றும் ஆய்வுக்கூடம், மலசலகூடம் என்பன அமைக்கப்பட்டு வருகின்றன.
மேற்படி தேவாலகந்த பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாடசாலை கட்டிடத்தொகுதியில் 6 தொடக்கம் 9 வரையான வகுப்புகளை விரையில் அங்கு கொண்டு செல்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனைய வகுப்புகளை பாதுகாப்பான இடத்தில் நடாத்தவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் மேற்படி பாடசாலையில் உள்ள அனைத்து வகுப்பறைகளையும் தேவாலகந்த புதிய கட்டிடத்தொகுதிக்கு மாற்றப்பட உள்ளது.
மேற்படி தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயத்தில் 6 தொடக்கம் 13 வரை வகுப்புகள் உள்ளதுடன் 420 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இப்பாடசாலையில் 36 ஆசிரியர்கள் சேவையாற்றுவதும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி கலந்துரையாடலில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, தெஹியோவிட்ட பிரதேச சபை தலைவர் துமிந்து ஷாமிந்த, சப்ரகமுவ மாகாண ஆளுநர் அலுவலகத்தின் செயலார் எச்.டி.சிசிர, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சுஜானி விஜேதுங்க, மாகாண கல்வி அமைச்சின் திட்டமிடல் பிரிவு பணிப்பாளர் நெவில் குமாரகே, மாகாண கல்வி பணிப்பாளர் சேபால குருப்பு ஆராச்சி மற்றும் பாடசாலை அதிபர் உட்பட பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவா ஸ்ரீதரராவ்