மனோ எம்.பி நாளை வியாழனன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ள சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

0
187
இன்றைய பொருளாதார நெருக்கடி எமது நாட்டின் தோட்ட தொழிலாளர்களை ஒப்பீட்டளவில் வேறு எந்த பிரிவினரையும் விட மிக அதிகமாக பாதிக்கின்றது.
இப்பிரிவினர் மீதான பாதிப்பு பற்றி முன்கூட்டியே கணிக்கப்பட்டு, அதுபற்றிய அவதானங்கள் கோரப்பட்டன.
எனினும் நிலைமை தொடர்ந்தும் ஆபத்தாக இருப்பதை பின்வரும் உலக மட்ட அறிக்கைகள் காட்டுகின்றன.
(1)இலங்கையின் உணவு நெருக்கடி கணிப்பீடு பற்றிய ஐநா சபையின் உணவு விவசாய நிறுவனம்/உலக உணவு நிறுவன (UN FAO/WFP) விசேட கூட்டறிக்கை.
(2)இலங்கையின் உணவு நெருக்கடி பற்றிய ஐநா சபையின் உலக உணவு நிறுவன (UN WFP) கண்காணிப்பு அறிக்கை
(3)இலங்கை செஞ்சிலுவை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கங்களின் (SLRC/ICRC) பொருளாதார ஆய்வறிக்கை
(4)நவீன அடிமைத்துவம் பற்றிய ஐநா விசேட அறிக்கையாளர் டொமாயா ஒபகடாவின் ஐநா மனித உரிமை ஆணையக அறிக்கை
நாட்டின் உணவு நெருக்கடி பற்றிய குடும்ப மட்ட ஆய்வுகளில், பெருந்தோட்ட துறையில் அதிகபட்ச 51 விகிதம் பதிவாகி உள்ளது. நாட்டின் நகர துறையில் 43 விகிதமும், கிராமிய துறையில் 34 விகிதமும் பதிவாகி உள்ளன.
நடப்பு அரசாங்க சமூக பாதுகாப்பு முறைமைகள், பெருந்தோட்ட துறையை தேவையான அளவில் பாதுகாக்காமல், இந்த பிரிவை முழுமையாக தோட்ட தனியார் நிறுவனங்களின் கைகளில் விட்டுள்ளன. இந்த நடைமுறை இதற்கு முன்னும் சாத்தியப்படவில்லை. இனிமேலும் சாத்தியப்படாது.
17/10/2022 திகதிய, DSD/HO/14/SS/05/01/04/2022 இலக்க சுற்றறிக்கை மூலம் சமுர்த்தி திணைக்களம், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், காலகட்டத்துக்கான உதவி பெறுனர் விண்ணப்பங்களை கோரியுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் அமுலாகும் இந்த திட்டம் பற்றிய சிங்கள மொழி சுற்றறிக்கை விபரங்கள், இலங்கையின் மிகவும் நலிவுற்ற பிரிவினரான பெருந்தோட்ட மக்களை சென்றடையவில்லை.
இலங்கை பாராளுமன்றம் , இலங்கையின் மிகவும் நலிவுற்ற பிரிவினரான இந்த பெருந்தோட்ட மக்களின் மீது விசேட அவதானத்தை செலுத்த வேண்டும் என நான் பிரேரிக்கிறேன்.
இலங்கை அரசாங்கம், நமது சர்வதேச அபிவிருத்தி பங்காளர்களான, ஐநா நிறுவனங்கள் மற்றும் இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாட்டு அரசாங்கங்களின் ஒத்துழைப்புடன் விசேட ஒதுக்கீட்டு (Affirmative Action) நடவடிக்கைகளை, உணவு நெருக்கடி அபாய நிலையில் இருக்கும் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டும் எனவும் நான் பிரேரிக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here