மகசின் சிறைக்குள்ளே சென்று தமிழ் கைதிகளை சந்தித்து விட்டு வெளியே வந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஊடகங்களிடம் கூறியதாவது;
கொழும்பு மகசின் சிறையில் 13 தமிழ் கைதிகள், உண்ணாவிரதத்தை தொடர்கிறார்கள். உண்ணாவிரதத்தை கைவிட, சட்ட மாஅதிபரின் தலையீட்டு உறுதிமொழியை கோருகிறார்கள்.
அரசாங்கத்தின் அறிவுறுத்தல் இன்றி, சட்டமா அதிபர் தலையிட மாட்டார் என அவர்களுக்கு சொன்னேன். ஆகவே ஜனாதிபதியுடன் கடந்த 19ஆம் திகதி சனிக்கிழமை இவ்விவகாரம் பற்றியும் நடத்திய பேச்சு விவரங்களை கூறினேன்.
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வருவதற்கு முதல் காத்திரமான நம்பிக்கை ஊட்டும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடப்பாடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கிறது என வலியுறுத்தி உள்ளேன்.
இவ்வரிசையில் முதல் நடவடிக்கையாக அரசியல் கைதிகள் விடுதலையையே நாம் கருதுகிறோம். எஞ்சியிருக்கும் தமிழ் கைதிகளை பிணை, வழக்கு வாபஸ், பொதுமன்னிப்பு ஆகிய முறைகளில் விடுவிக்கும் காலம் உதயமாகி விட்டது. நம்பிக்கையுடன் இருக்கும்படி வலியுறுத்தினேன்.