மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குருமுதல்வர்

0
41

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குருமுதல்வராக அருட்திரு . தமிழ் நேசன் அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளார் . மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் இந்த நியமனத்தை வழங்கினார் .

மடுத்திருப்பதியில் ஐந்து நாட்கள் நடைபெற்ற மன்னார் மறைமாவட்டக் குருக்களுக்கான வருடாந்தத் தியானத்தின் நிறைவில் 14.03.2025 அன்று இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது .

ஒரு மறைமாவட்டத்தில் குருமுதல்வர் ( Vicar General ) பதவி என்பது மறைமாவட்ட ஆயருக்கு அடுத்த நிலையில் உள்ள உயர் பதவியாகும் . மன்னார் மறைமாவட்டத்தின் குருமுதல்வராக நியமிக்கப்பட்டுள்ள அருட்திரு தமிழ் நேசன் மன்னார் மாவட்டத்தின் முருங்கன் கிராமத்தில் காலம்சென்ற திரு . திருமதி சந்தான் பாவிலு தம்பதியருக்கு பதினொராவது மகனாக 1969 ஆம் ஆண்டு பிறந்தார் .

முருங்கன் மகாவித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியையும் . யாழ்ப்பாணம் புனித சம்பத்திரிசியார் கல்லூரியில் தனது உயர்தரக் கல்வியையும் கற்றார் . யாழ்ப்பாணம் புனித மாட்டினார் சிறிய குருமடத்தில் தனது ஆரம்ப குருத்துவ உருவாக்கத்தைப் பெற்ற இவர் , தனது மூன்று வருட மெய்யியல் கல்வியை கண்டி தேசிய குருத்துவக் கல்லூரியிலும் , நான்கு வருட இறையியல் கல்வியை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியிலும் கற்றார் .

1997 ஆம் ஆண்டு அன்றைய மன்னார் ஆயர் மேதகு இரா . யோசேப்பு ஆண்டகையினால் மன்னார் மறைமாவட்டக் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார் . வங்காலை, மன்னார் ஆகிய பங்குகளில் உதவிப் பங்குத்தந்தையாகவும் , தலைமன்னாரில் பங்குத்தந்தையாக மூன்று வருடங்களும் பணியாற்றினார் . தொடர்ந்து மன்னார் மறைகல்வி இயக்குனராக ஐந்து வருடங்களும் , கலையருவி எனப்படும் சமூகத்தொடர்பாடல் அருட்பணி மைய இயக்குனராக ஏழு வருடங்களும் , மன்னார் மறைமாவட்ட கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் சர்வமத உரையாடல் ஆணைக்குழுவின் இயக்குனராக ஒன்பது வருடங்களும் , ‘ மன்னா ‘ என்ற மறைமாவட்டப் பத்திரிகையின் ஆசிரியராக 16 வருடங்களும் , மன்னார் சிறிய குருமட அதிபராக ஐந்து வருடங்களும் , மன்னார் மறைமாவட்ட செனற் சடையின் செயலாளராக ஐந்து வருடங்களும் பணியாற்றினார் . தற்போது தோட்டவெளி வேதசாட்சிகள் இராக்கினி திருத்தலத்தின் பரிபாலகராகவும் , தோட்டவெளி பங்குத்தந்தையாகவும் , மன்னார் மறைக்கோட்ட ( Dean of Mannar Deanery ) முதல்வராகவும் பணியாற்றிக்கொண்டிருந்த நிலையில் இந்தப் புதிய பணிப்பொறுப்பு அடிகளாருக்கு வழங்கப்பட்டுள்ளது .
தமிழ்நேசன் அடிகளார் சிறந்த கல்வித் தகைமை கொண்டவராக விளங்குகின்றார் .

உரோமாபுரியில் உள்ள ஊர்பானியா பல்ககலைக்கழகத்தில் மெய்யியல் மாணிப் பட்டத்தையும் ( Bachelor of Philosophy ) . இறையியல் மாணிப் பட்டத்தையும் ( Bachelor of Theology ) பெற்றுக்கொண்ட இவர் , யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் எம்.ஏ. பட்டத்தையும் ( M.A in Tamil ) , கிறிஸ்தவ நாகரீகத்தில் எம் . பில் . ( M.Phil . ) பட்டத்தையும் பெற்றுள்ளார் . தற்போது கண்டி பெரதெனியா பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் கலாநிதிப் பட்டத்தை நிறைவுசெய்யும் நிலையில் உள்ளார் .
சிறந்த தமிழ் அறிஞராகத் திகழும் தமிழ் நேசன் அடிகளார் பத்துக்கும் அதிகமான எழுதியுள்ளார் .

பல தேசிய , சர்வதேச தமிழ் மாநாடுகளில் பங்கேற்றுள்ளார் . பல்வேறு நாடுகளில் நடைபெற்ற உலகத்தமிழராய்ச்சி மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார் . 2009 ஆம் ஆண்டு மன்னாரில் மன்னார் தமிழ்ச் சங்கத்தை நிறுவி அதன் தலைவராக இரண்டு தடவைகள் பணியாற்றியுள்ளார் .

2010 ஆம் ஆண்டு நான்கு நாள் மன்னார் தமிழ்ச்செம்மொழி மாநாட்டையும் , 2013 ஆம் ஆண்டு மூன்று நாள் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவையும் மன்னாரில் பிரமாண்டமாக நடாத்தி தேசிய சர்வதேச கவனத்தைப் பெற்றுக்கொண்டார் .

இந்த இரண்டு மாநாடுகளும் அடிகளாரின் செயற்திறனை வெளிப்படுத்திய இருபெரும் நிகழ்வுகளாகும் .
அடிகளாரின் தந்தை திரு சந்தான் பாவிலு அவர்களும் , அவருடைய தந்தை திரு . மரியான் சந்தான் அவர்களும் பல கத்தோலிக்க நாட்டுக்கூத்து நாடகங்களை எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

ஈழத்தின் முதுபெரும் தமிழ் அறிஞர்களான நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் மற்றும் தமிழ்த்தூது தனிநாயம் அடிகளார் வழியில் தமிழ்ப்பணி புரியும் அடிகளார் தொடர்ந்து எழுதியும் , தமிழ் மாநாடுகளில் பங்கெடுத்தும் வருகின்றார் . சமயப் பணியையும் , தமிழ்ப் பணியையும் தனது இரு கண்களாகக் கொண்டு இடையறாது பணியாற்றும் அடிகளாரின் திறமையையும் செயற்திறனையும் அங்கீகரிக்கும் முகமாக மன்னார் மறைமாவட்டத் திருச்சபை மறைமாவட்டக் குருமுதல்வர் பணிப்பொறுப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

எழுத்துரு : செந்தூரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here