மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலந்தனை கிராமத்தில் 1992ஆம் ஆண்டு நடைபெற்ற படுகொலைச் சம்பவத்தின் 30ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மயிலங்தனை விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது.
நிளைவு நாளை முன்னிட்டு ஆலயத்தில் பொங்கல் பொங்கி, விசேட பூஜை பிரார்த்தனை நடைபெற்று, நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிராம மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில், ஆலய மதகுருக்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வின் நிறைவில், தங்களுக்கு மறுக்கப்பட்ட நீதியை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரை ஆலய மதகுருவிடம் கிராமமக்கள் கையளித்தனர்.
மட்டக்களப்பு நகருக்கு வடக்கே 50 கிலோமீற்றர் தொலைவில் உள்ள புனானை மயிலந்தனை கிராமத்தில் 09 ம் திகதி ஆவணி மாதம் 1992 ம் ஆண்டு எமது மயிலந்தனை கிராமத்தைச் சார்ந்த சிறுவர்கள், பெண்கள் அடங்கலாக 39 பேர் வெட்டியும், சுடப்பட்டும், கொலை செய்யப்பட்டார்கள். 34 பேர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இன்றைய நாளில் 35 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
இதன் போது எமது கிராமத்தினை சேர்ந்த நேரில் கண்ட சாட்சியங்களின் அடிப்படையில் புனாணை இராணுவ முகாமைச் சேர்ந்த இலங்கை இராணுவத்தினரே இப்படுகொலைகளை நிகழ்த்தியதாக வழக்குத் தொடுக்கப்பட்டது.
1993 ஆம் ஆண்டு சித்திரை 2 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்பு இடம்பெற்று, 24 இராணுவத்தினர் எமது கிராமத்தில் உயிர் தப்பிய எங்களால் அடையாளம் காட்டியிருந்தனர்.
பின்னர் இவ்வழக்கு பொலன்னறுவை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இருந்த போதும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பாதுகாப்புக் கருதி சட்டமா அதிபர் இவ்வழக்கை கொழும்பு நீதிமன்றத்துக்கு மாற்றினர். இதனால் எமது கிராமத்தினைச் சேர்ந்த சாட்சிகள் கொழும்பு சென்று சாட்சி சொல்வதற்குப் பெரும் சிரமப்பட்டதுடன், அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்ட நிலையில் 1993 புரட்டாதி மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மட்டக்களப்பிலிருந்து 30 இற்கும் அதிகமான சாட்சிகள் விசாரணையில் கலந்து கொண்டனர்;. தீவிர விசாரணையின் பின்னர் தீர்ப்புக் கூறும் முடிவு ஜுரி குழுவுக்கு கொடுக்கப்பட்டது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எந்த ஒரு இராணுவத்தினரும் குற்றம் இழைக்கவில்லை என ஜுரி குழு ஏகமனதாகத் தீர்ப்பளித்தது. மீண்டும் இதனைப் பரிசீலிக்குமாறு நீதிபதி கேட்டுக் கொண்ட போதும், ஜுரி சபையினர் அவர்களைக் குற்றமற்றவர்கள் எனக் கூறினர். படுகொலை செய்யப்பட்டவர்கள் சார்பாக மேன்முறையீடு செய்வதற்கு சட்டமா அதிபர் ஒப்புதல் அளிக்கவில்லை.
குற்றம் சாட்டப்பட்ட 18 இராணுவத்தினரும் நவம்பர் 27ஆம் திகதி 2002 விடுதலை செய்யப்பட்டனர். இத்தீர்ப்பினை அடுத்து மனித உரிமைச் செயற்பாட்டாளர், சிவில் அமைப்புக்கள், கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள், கிராம மக்களும் இது குறித்து அதிருப்தியடைந்தனர்.
மயிலந்தனை படுகொலை நடந்து இன்று 30ஆம் ஆண்டு நினைவு தினத்தில் மீளவும் நீதிக்காக தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
1. எமது வழக்கு மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஜுரி முறை விசாரணையை நாம் ஏற்க மறுக்கிறோம்.
2. சாட்சிகளுக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
3. சாட்சிகளின் வழக்கு செலவை அரசு பொறுப்பேற்க வேண்டும்.
4. பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
5. மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். அதற்கான அரச தரப்பு முன்னெடுப்புகளை அறிவித்தல் வேண்டும்.
என்று மயிலந்தனை கிராம மக்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.