அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட டயகம பிரதேசத்தில் சுமார் ஆறாயிரம் குடும்பங்கள் தினமும் பாவிக்கும் 7 கிலோ மீட்டர் பிரதான வீதியை சீர்த்திருத்தி செப்பனிடு தருமாறு டயகம கிழக்கு தோட்ட மக்கள் புதன்கிழமை (03) காலை வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த போராட்டம் டயகம கிழக்கு தோட்ட தொழிற்சாலைக்கு செல்லும் வழியில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் கலந்துக்கொண்ட தோட்ட மக்கள் எதிர்பார்ப்புகள்,எதிர்ப்புகள்,கோரிக்கைகள், அடங்கிய சுலோகங்களை ஏந்தி கோஷங்களை ஒலிக்க செய்து நடைபவணியாக வருகை தந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மிக நீண்டகாலமாக டயகம நகரில் இருந்து டயகம கிழக்கு தோட்டம் வரை மக்கள் பயணிக்கும் ஏழு கிலோமீட்டர் தூரமான வீதி பாவனைக்கு அறுகதையற்ற நிலையில் குன்றும் குழியுமாக சீர் கெட்டு காணப்படுகிறது.
ஒவ்வொறு தேர்தல் காலத்திலும் இப்பகுதிக்கு வாக்கு கேட்டு சொகுசு வாகனங்களில் படையெடுத்து வரும் அரசியல் தலைவர்கள் இவ் வீதியை செப்பணிட்டு தருவதாக மக்கள் பார்வைக்கு கற்களை குவித்து அடிக்கல் நாட்டி செல்கிறார்கள்.
ஆனால் தேர்தலில் எமது வாக்குகளை பெற்ற பின் எம்மையும் ,எமது வீதியின் அபிவிருத்தியையும் மறுபடி ஒரு தேர்தல் வரும் வரை மறந்து விடுகின்றதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் தமது ஆதங்கத்தை வெளிக்காட்டினர்.
டயகம கிழக்கு தோட்டம் வரை பத்து தோட்டங்களை சேர்ந்த ஆறாயிரம் குடும்பங்களை சேர்ந்த அதிக மக்கள் வசிக்கும் பாரிய பிரதேசமாகும்.இவர்கள் டயகம நகருக்கு வருகை தர பழுதடைந்த ஏழு கிலோமீட்டர் தூர பாதையை பயன்படுத்த வேண்டியுள்ளது.
இந்த நிலையில் இந்த வீதி ஊடாகவே பாடசாலைகள்,
வைத்தியசாலை, தொழிற்சாலை, பிரதான நகருக்கு செல்லும் போக்குவரத்து, விவசாய நடவடிக்கை உள்ளிட்ட பயன் பாடுகள் மேற்கொள்ள மக்கள் இவ் வீதியை மாற்று வழியின்றி பயன்படுத்துகின்றனர்.
எனவே இவ்வீதியின் சீர்கேடு தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்று எந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மறுப்பு தெரிவிக்க முடியாது. ஆகையால் இம்முறையும் இவ் வீதி ஊடாகவே தேர்தலுக்கு வாக்கு கேட்க அரசியல் வாதிகள் வரவேண்டும் இந்த நிலையில் முதலில் ரோட்டை போடு பிறகு ஓட்டை கேளு என்ற பிரதான கோரிக்கையை நாம் முன்வைக்கின்றோம்.
எனவே டயகம கிழக்கு தோட்ட மக்களின் ஆதங்கத்தை உணர்ந்து இவ் வீதி ஊடாக பயணக்கும் பாடசாலை மாணவர்கள் உள்ளடங்களாக பொதுமக்களின் நன்மை கருதி வீதியை செப்பனிட காலம் தாழ்த்தாது அரசியல் வாதிகள், அரச திணைக்களங்கள், அதிகாரிகள் நடவடிக்கையை எடுக்க முன் வரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து முதலாவது போராட்டதில் இருந்து கலைந்து சென்றனர்.
ஆ.ரமேஸ்.