முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக பெரேரா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
நேற்று கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இப்பதவிப்பிரமாணம் இடம்பெற்றது. தொழிலதிபர் தம்மிக பெரேரா கடந்த புதன்கிழமை (22) சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
பசில் ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து, பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தொழிலதிபர் தம்மிக பெரேரா நியமிக்கப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே கடந்த செவ்வாய்க்கிழமை (21) உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1967 டிசம்பர் 28ஆம் திகதி களுத்துறை கட்டுக்குறுத்தை பிரதேசத்தில் பிறந்த தம்மிக்க பெரேரா, ஹொரணை தக்ஸிலா வித்தியாலையத்தின் பழைய மாணவராவார். அத்துடன் இவர் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் தேசிய தொழில்நுட்ப டிப்ளோமாதாரி (NDT) ஆவார்.