பாரதி அறக்கட்டளையின் அனுசரணையின் கீழ் மலையகத்தை சேர்ந்த மற்றுமோர் இளம் படைப்பாளியான எஸ்.கே விஜியின் ‘யோனி’ குறும்படம் ‘2022.07.02’ நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் சௌமிய கலையரங்கில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக கல்லூரி முதல்வர் எஸ்.ரவிச்சந்திரன், உப அதிபர் திருச்செல்வம், நுவரெலியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துக்கொண்டனர்.
நண்பகல் 12.30 மணியளவில் ஆரம்பமான இவ்விழாவானது மங்கள குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனை தொடரந்து ஆரம்ப உரை நிகழ்த்திய தேசிய கலை இலக்கியப் பேரவையின் உறுப்பினர் மகேந்திரன் கருத்து தெரிவிக்கையில் இலங்கையின் இன்றைய யதார்த்த சூழலும் நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் நிலை குறித்தும் கூறியதோடு சமூக மாற்றத்திற்க்காக மக்கள் அனைவரும் ஒன்று பட வேண்டும் எனவும் தமிழ்,சிங்கள மொழிகளில் குறிப்பிட்டார். இதனையடுத்து பாரதி அறக்கட்டளையின் உறுப்பினர் யாஷ் பெண்ணுரிமை சார்ந்த கவிதை ஒன்றை வாசித்தார்.
இவ்விழாவின் அடுத்த அம்சமாக யோனி குறும்படத்தின் முதற்பார்வை ஒளிபரப்பப்பட்டு யோனி குறும்படமும் திரையிடப்பட்டது. ஒரு குடும்ப தலைவன் வேறொரு குடும்ப பெண்ணோடு தகாத உறவு கொண்டு அதன் விளைவாக வந்த வினைகளை அழகான காட்சி மொழியோடு விபரித்திருந்தனர். யோனி குறும்படம் திரையிடப்பட்ட பின்னர் படக்குழுவினருக்கான வாழ்த்துரையினையும் ஆசியுரையினையும் கல்லூரி முதல்வர் எஸ்.ரவிச்சத்திரன் வழங்கினார். அதனை தொடர்ந்து உரையாற்றிய கல்லூரியின் பிரதி அதிபர் திருச்செல்வம் இக்குறும்படம் பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் விழிப்புணர்வு என்பவற்றை எடுத்துரைத்து தன்னுடைய நாடக மற்றும் சினிமா அனுபவங்களோடு இக்குறைம்படத்தை ஒப்பிட்டு தனது கருத்துரையை தெரிவித்திருந்தார்.
அடுத்த நிகழ்வாக பரிசுத்த திரித்துவ கல்லூரியின் நாடக ஆசிரியர் சுதர்சன் கருத்து தெரிவிக்கையில் யோனி குறும்படத்தின் பேசுபொருளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததோடு படக்குழுவினருக்கு தமது வாழ்த்தையும் தெரிவித்தார். இதன் பின்னர் படக்குழுவினரால் இயக்குனர் அறிமுகம் செய்யப்பட்டதுடன்.
இயக்குனர் இந்த கதையின் மூலப்பொருளை தெரிவு செய்தமைக்கான காரணத்தை பார்வையாளர்கள் மத்தியில் விபரித்திருந்தார். மேலும் டயகம பாடசாலை ஆசிரியர் செல்வா மற்றும் செல்வி ருக்ஷானி ஆகியோரின் உரையினை தொடர்ந்து பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் அக்குறும்படம் திரையிடப்பட்டது.
இதன் பின்னர் பார்வையாளனாக இருந்த ரா. கவிஷானின் உரையை தொடர்ந்து இக்குறும்பட வெளியீட்டு விழா நிறைவுற்றிருந்தது. மேலும் ஊடகவியலாளர் அகிலேஷ் திறம்பட இந்நிகழ்வை தொகுத்து வழங்கினார். படக் குழுவினருக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.
ஆர்- கே