ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான 2 ஆவது வழக்கில் ரஞ்சன் ராமநாயக்க குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்தே இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு பாராளுமன்றத்தைக் கலைத்த அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரிய அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்து, நீதித்துறையை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது என உயர் நீதிமன்ற பதிவாளரினால் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்க சமூக வலுவூட்டல் பிரதியமைச்சராக இருந்த வேளையில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், இந்நாட்டிலுள்ள நீதவான்கள் மற்றும் வழக்கறிஞர்களில் பெரும்பாலானோர் ஊழல்வாதிகள் எனும் தெரிவித்ததாக அவருக்கு எதிராக கடந்த 2017ஆம் ஆண்டு முதலாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அவர் தற்போது அதனை அனுபவித்து வருவதோடு, குறித்த சிறைத்தண்டனை காரணமாக அவர் தனது எம்.பி. பதவியையும் இழந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.