‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

0
131

 நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளால் நாட்டின் பொருளாதாரத்தினால் மீண்டும் வீழ்ச்சியடைய இடமளிக்கக் கூடாது.

 அடுத்த 05 வருடங்கள் இலங்கையின் வெற்றிக்கான காலம்

 எதிர்காலத்திலும் நாட்டுக்காக எம்மால் இயன்றவற்றை தொடர்ந்து செய்வோம்

 கடினமாக பெற்ற பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்து – நாட்டைப் பாதுகாப்போம்.

 இளைஞர் யுவதிகளுக்காக முதல் கட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளுடன் வருமான மூலங்கள்!

 பாடசாலைகளை முடித்து வெளியேறும் 50,000 மாணவர்களின் தொழிற்துறைப் பயிற்சிக்கு உடனடி நிதி ஒதுக்கீடு

 ஊழல் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த குழு

– ஜனாதிபதி வலியுறுத்தல்

தன்னால் வழங்கக்கூடியவற்றை மாத்திரமே நாட்டுக்கு வாக்குறுதியளிப்பதாகவும், தன்னால் முடியாததை வாக்குறுதியளித்து நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைச் செய்ய தாம் தயாரில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் 05 வருடங்களில் நாட்டுக்காக தன்னால் இயன்றதை செய்து இளைஞர்களுக்காக கடன் சுமையற்ற அபிவிருத்தி அடைந்த நாட்டை கட்டியெழுப்புவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

வாழ்க்கைச் சுமையைக் குறைத்தல், தொழில் வாய்ப்புகளை வழங்குதல், வரி நிவாரணம் வழங்குதல், பொருளாதார மேம்பாடு, உறுமய மற்றும் அஸ்வெசும வேலைத் திட்டங்களை செயற்படுத்தி ஒவ்வொரு பிரஜைக்கும் காணி அல்லது வீட்டு உரிமை பெறும் வேலைத்திட்டம் என்பன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று (29) வெளியிட்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘தேரவாத வர்த்தகப் பொருளாதாரம், 2025இற்கு அப்பால் செல்லும் செயல்முறை, ஒளிமயமான சமுதாயத்தை நோக்கி, வெற்றிபெறும் தாய்நாடு, ஒன்றிணைந்த இலங்கை’ ஆகிய 05 பிரதான பிரிவுகளை உள்ளடக்கிய ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனம், மகா சங்கத்தினர் உட்பட மதத் தலைவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், இளைஞர்களுக்கும் கையளிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனம் இன்று கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்பட்டது.

இந்த தேர்தல் விஞ்ஞாபனம் அடங்கிய www.ranil2024.lk இணையத்தளம் இதன்போது ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (29) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்பட்டது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“ஜனாதிபதி தேர்தலுக்கான எனது கொள்கை பிரகடனம் வெறுமனே கொள்கை பிரகடணமாக மாத்திரமின்றி நாட்டின் மீட்சிக்காக செயற்படுத்த வேண்டிய துரித வேலைத் திட்டங்களை உள்ளடக்கியதாகவே அமைந்திருக்கிறது.

மற்றைய வேட்பாளர்கள் நீண்ட கால தீர்வுகளை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் தற்போதைய தருணத்தில் இலங்கைக்கு நீண்ட கால தீர்வு திட்டங்கள் பொருத்தமாக அமையாது. இலங்கை தற்போது நெருக்கடிக்குள் இருக்கிறது. பொருளாதாரமும் அரசியலும் சரிவடைந்திருக்கிறது. 2022 இல் நாட்டிலிருந்த குழப்ப நிலைக்கு மத்தியில் நாட்டை ஏற்றுக்கொள்ள எவரும் இருக்கவில்லை.

என்னோடு பணியாற்ற வந்த பிரதமரும் அமைச்சர்களும் என்னுடன் உள்ளனர். எவ்வாறாயினும், 2023 களில் நாம் பொருளாரத்தை நிலைத்தன்மைக்கு கொண்டு வந்தோம். பொருளாதார நிலைத்தன்மையை முன்னோக்கி கொண்டுச் சென்றிருக்கிறோம். நிலைத்தன்மையைப் பாதுகாக்க எதிர்வரும் காலங்களிலும் பாதுகாக்க வேண்டும். அதற்காக இலங்கையை ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நகர்த்த வேண்டியுள்ளது.

போலி வாக்குறுதிகளை வழங்கி நாட்டை மீண்டும் சரிவிற்குள் தள்ளிவிட வேண்டிய தேவை எனக்கு இல்லை. பொருளாதாரம், அரசியல் என்பன சரிவடைந்த நாடுகளின் நிலையை இன்று நாம் காண்கிறோம். பங்களாதேஷும், மாலைதீவும் அடைந்துள்ள நிலைமை நமக்குத் தெரிகிறது. நாம் கண்ட துர்பாக்கிய நிலையை மீண்டும் உருவாக்கினால் அடுத்த சந்ததியின் எதிர்காலம் சூனியமாகிப் போகும்.

அதனால் நாட்டில் நிலைத்தன்மையைப் பாதுகாத்து பொருளாதாரத்தை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இளையோரின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான சட்டத்தைத் தயாரித்துள்ளோம். அதனை நிறைவேற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக மாறுப்பட்ட பொருளாதார திட்டங்களை செயற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இலங்கை – சர்வதேச நிதிய ஒப்பந்தம் மற்றும் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாம் செயற்பட வேண்டியது அவசியமாகவுள்ளது. அதேபோல் சீனா, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கிகளுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் செயற்பட வேண்டிய அவசியமும் உள்ளது.

தற்போதும் நாம் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே செயற்படுவதால் எதிரணி வேட்பாளர்கள் அதனை செய்யத் தயாராக உள்ளனரா என்பதே எனது கேள்வியாகும். இவற்றைத் திருத்தம் செய்யாமல் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த அவர்களால் முடியுமா?

இதன்கீழ், முதற் காரணியாக தேரவாத வர்த்தக பொருளாதாரத்தை செயற்படுத்துகிறோம். அனுராதபுர யுகத்தில் இலங்கையில் சிறந்த வர்த்தகம் காணப்பட்டுள்ளது. இலங்கையின் அமைவிடம் அதற்கான சாதகத்தை ஏற்படுத்தி தந்திருந்தது. அனுராதபுரத்தில் அமைக்கப்பட்ட அனைத்துக் குளங்களும் சொந்த நிதியில் அமைக்கப்படிருப்பதே அப்போதைய பொருளாதார வலுவுக்கு சான்றாகும்.

ஆனால் மகாவலியைக் கட்டமைக்க வௌிநாட்டு உதவியை நாடினோம். இந்த மாற்றத்தை புரிந்துகொள்ள வேண்டும். இன்று தாய்லாந்தும் வியட்நாமும் தேரவாத வர்த்தக முறைமைகளை முழுமையாக பின்பற்றுகின்றன. அவற்றை நாமும் செயற்படுத்துவதாக தேர்தல் பிரகணடத்தில் குறிப்பிட்டிருக்கிறோம்.

அடுத்தாக நாட்டு மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்தனர். அதனால் பொருளாதார வளர்ச்சியில் மக்களுக்கும் நிவாரணம் கிடைக்க வேண்டும். அதனால் உறுமய திட்டத்தின் கீழ் 20 இலட்சம் பேருக்கு காணி உறுதிகளை வழங்குகிறோம். குறைந்த வருமானம் பெறும் 2 இலட்சம் குடும்பங்களுக்கு வீட்டு உரிமைகளை வழங்குகிறோம். தோட்டங்களை கிராமங்களாக்கி மக்களுக்கு காணி உறுதி வழங்கவுள்ளோம். மக்கள் உரிமையைப் பாதுகாக்கும் பணிகளை இந்த திட்டங்களின் கீழ் முன்னெடுக்கிறோம்.

எதிர்காலத்தில் சலுகை அடிப்படையில் குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீட்டுக் கடன்களையும் வழங்குவோம் மத்திய தரத்தினருக்கும் கடன்களை வழங்குவோம். சிறு மற்றும் மத்திய தர தொழில்துறை பாதுகாப்பிற்காக தற்போதும் 50 பில்லியன்களை நாம் வழங்கியிருக்கிறோம்.

மூன்றாவதாக எமது பொருளாதார செயற்பாடுகளை காலநிலை அனர்த்தங்களுக்கு வழி செய்யாத வகையில் முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம். இவற்றோடு ஐந்து முக்கிய காரணிகள் உள்ளன. முதலில் வாழ்க்கை சுமையைக் குறைக்க வேண்டும். அதற்காக ரூபாவின் பெறுமதியைப் பலப்படுத்த வேண்டியுள்ளது. அடுத்தாக தொழில்வாய்ப்புக்கள் உருவாக்குவோம். மூன்றாவது வரிச்சலுகைகளை வழங்குவோம். அடுத்தபடியாக பொருளாதாரத்தை மேம்படுத்துவோம். அதனால் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நகர்வதே இலக்காக உள்ளது. பின்னர் ‘உறுமய’, ‘அஸ்வெசும’ திட்டங்களை செயற்படுத்துவோம்.

எனவே புதிய கொள்கைகளை கொண்டு வந்து விவாதித்துக் கொண்டிருப்பதை விடவும் மக்கள் கஷ்டத்தைப் போக்குவதற்கான திட்டங்களை செயற்படுத்துவோம். ‘இயலும் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் துரிதமாக முன்னெடுக்க கூடிய செயற்பாடுகளை நாம் நடைமுறைப்படுத்துவோம்.. அதற்காக நிவாரணங்களைப் பெற்றுக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

குறிப்பாக விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை துரிதமாக செயற்படுத்தலாம். அதற்காக அடிப்படைச் செயற்பாடுகளை இப்போதும் முன்னெடுத்திருக்கிறோம். சுற்றுலாத் துறையில் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பணிகளை ஆரம்பித்துள்ளோம். உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம். தொழிற்சாலை அபிவிருத்தி வர்த்தக வலயங்களை ஸ்தாபிக்கும் பணிகள் உள்ளிட்ட பல பணிகளை பிங்கிரியவில் ஆரம்பித்திருக்கிறோம். வடக்கிலும் ஹம்பாந்தோட்டையிலும் ஆரம்பிக்க தயாராக இருக்கிறோம்.

அதேபோல் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியை பொருளாதாரத்தின் முக்கிய பங்காக இணைக்கப் போகிறோம். அடுத்ததாக டிஜிட்டல் மயமாக்கலுக்கான பணிகள் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை இளையோருக்கு உருவாக்கி கொடுக்க வேண்டியுள்ளது.

நான்கு வருடங்களாக எந்த தொழில்வாய்ப்புக்களையும் வழங்க முடியாமல் போனது. நாம் முன்னேறும் போது தொழில் வாய்ப்புக்கள் உருவாகும்.. அதன் கீழ் ஸ்மார்ட் விவசாயம் செய்வதற்கான நிதி உதவிகளை வழங்க எதிர்பார்க்கிறோம். சுற்றுலா துறையிலும் இவ்வாறான தொழில்களை வழங்குவோம். அரசாங்கத்தின் கீழ் உள்ள தொழில்களுக்கும் உள்வாங்க எதிர்பார்க்கிறோம்.

பாடசாலை கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு தொழில் கல்வி பயில்வதற்கான வவுச்சர் ஒன்றை வழங்க எதிர்பார்க்கிறோம். தனியாரின் கீழ் செய்வதா அரசாங்கத்தின் கீழ் செய்வதா என்பதை தீர்மானிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது. அதனால் தொழில் பயிற்சி நிலையங்கள் அனைத்தையும் ஒரு கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவோம். அதேபோல் அனைவருக்கும் ஆங்கில கல்வி என்ற திட்டமும் செயற்படுத்தப்படும்.

ஹிங்குரங்கொடையில் புதிய விமான நிலையமொன்றை அமைக்கவுள்ளோம். தோட்டங்களை கிராமங்களாக்கும் திட்டத்தை செயற்படுத்துவோம். அதேபோல் திருடர்களை பிடிப்பது பற்றி பேசுவோர் அதற்கான வழியை சொல்லவில்லை. ஆனால் நாம் அதற்குத் தேவையான சட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். இவற்றை செயற்படுத்த பாராளுமன்ற செயற்குழுக்களை அமைத்து சபாநாயகரின் கீழ் அவற்றை வழிநடத்துவோரை தெரிவு செய்வோம்.

தொழிற்சங்கத்தினர், சட்ட தொழில் செய்வோர், வர்த்தக துறை சார்பில் ஒருவர் என்ற அடிப்படையில் அந்த குழுக்களை வழிநடத்துவோரை தெரிவு செய்வோம். பெண்களை வலுவூட்டும் சட்டம் நிறைவேறியுள்ளது. அரச ஊழியர்கள் புதிய பாடங்களை கற்பதற்கு ஒரு வருட விடுமுறை வழங்குவோம். அரச கொள்கை மற்றும் முகாமைத்துவ பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்போம். இவ்வாறு துரிதமாக செய்யக்கூடிய பல திட்டங்கள் பற்றி சிந்திக்கிறோம்.

2048 ஆண்டு வரையில் தூர நோக்கு சிந்தனையுடன் பார்த்து செயற்படுகிறோம். அதனை செய்ய முடியும் என்று சொல்பர்களுடனேயே நாம் பயணிக்கிறோம். அதனால் செப்டெம்பர் 21 ஆம் திகதி சிலிண்டருக்கு வாக்களியுங்கள் அடுத்த நாள் முதல் அடுக்கட்ட பணிகளை நாம் ஆரம்பிப்போம்.” என்று ஜனாதிபதி உறுதியளித்தார்.

ஊடகப் பிரிவு
Ranil 2024 – இயலும் – ஸ்ரீலங்கா
29-08-2024

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here