இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் கீழ் மாகாண அபிவிருத்தி நிதியின் கீழ் ரூபாய் 10 மில்லியன் ஒதுக்கீட்டின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட லிந்துல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் திறப்பு விழா இடம்பெற்றது.
இக்காரியாலயம் பல வருடகாலத்தின் பின்னர் எதிர்ப்பு போராட்டங்கள் செய்யப்பட்டு புதிய இடத்தில் முழுமையாக அமைக்கப்பட்டு சமய சம்பிரதாயபூர்வமாக செவ்வாய்க்கிழமை (25) திறந்து வைக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக பயன்படுத்திய நுவரெலியா பிராந்திய சுகாதார காரியாலய பிரிவுக்குட்பட்ட லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அமைந்துள்ள கட்டிடத்தின் பின்புறத்தில் காணப்படும் பாரிய மண்மேட்டிலிருந்து மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக அவ்விடத்தில் இருந்து வெளியேறி நுவரெலியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அசேல பெரேராவை லிந்துல சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர் து. ரெஷ்னி உட்பட சுகாதார அதிகாரிகள் சந்தித்து இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கு அமைவாக இவ் புதிய கட்டிடத்தை அமைத்து பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது .
குறித்த நிகழ்வில் விசேட அதிதிகள் பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டு விசேட பூஜைகள் இடம்பெற்றதன் பின்னர் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் நிஹால் வீரசூரிய மற்றும் மத்திய மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. ஜகத் அதிகாரி, கௌரவ கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர். நுவரெலியா மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் மதுர செனவிரத்ன அவர்களின் பங்கேற்புடன் கௌரவ நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர், நுவரெலியா மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆரச்சி அவர்களினால் இவ் புதிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் திறந்து வைத்து பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது
நானுஓயா நிருபர்