வரவு – செலவு திட்ட உரை எமது மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை சிதறடித்து விட்டது

0
144

நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவு திட்ட உரையில் காணப்படுகின்ற, தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கொழும்பு மாநகர பாமர மக்கள் தொடர்பிலான அலட்சியப்போக்கு  எம்மை ஏமாற்றமடைய செய்துள்ளது கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என மனோ கணேசன் கூறியுள்ளார்.

நேற்றைய  வரவு செலவு திட்டம்  உரை தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

உலக வங்கி, ஐ.நா நிறுவனமான உலக உணவு திட்டம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றால், உணவின்மை மற்றும் வறுமை ஆகிய விடயங்களில் இலங்கையிலேயே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பின்தங்கிய பிரிவினராக பெருந்தோட்ட மக்கள் மற்றும்  மாநகர பாமர மக்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த பின்தங்கிய பிரிவினருக்கான விசேட ஒதுக்கீட்டு திட்டங்களை ஜனாதிபதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அது நடைபெறவில்லை. உடனடியாக நிவாரண திட்டங்கள் இல்லாவிட்டாலும் கூட, இம்மக்களின் இக்குறைபாடுகள் பற்றி தான் அறிந்துள்ளேன் என்பதை ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டு கூறி இருக்க வேண்டும். அப்படியாயின், இந்த நலிவடைந்த மக்களை அது ஓரளவு சாந்தப்படுத்தி இருக்கும். தமது பிரச்சினைகள் பற்றி ஆளுகின்ற அரசு அறிந்து வைத்துள்ளது என்பதை அறிந்து மக்கள் சற்று நம்பிக்கை அடைந்து இருப்பார்கள்.  தீர்வுகள் தாமதமாகி வரும் என ஆறுதல் அடைந்து இருப்பார்கள்.

ஆனால், உயிருள்ள உழைக்கும் மக்களை மறந்து விட்டு, தோட்டங்களில் உள்ள காணிகளை பற்றி பேசி, பயிரிடப்படாத காணிகளை, புதிய முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்து  கொடுக்க போவதாக நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வரவு செலவு திட்ட உரையில் கூறி உள்ளார். நமது மக்களுக்கு பயிரிடப்படாத காணிகள் தருவதாக எனக்கு பாராளுமன்றத்தில் தந்த வாக்குறுதியை அவர் மறந்து விட்டார். அப்போது அவர் பிரதமர். இப்போது ஜனாதிபதி. ஆனால், நாம் மறக்கவில்லை. நுவரெலியா முதல் கொழும்பு அவிசாவளை வரை துன்பப்படும் நமது மக்களை, இந்த அலட்சியம்  கொல்லாமல் கொல்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here