புகைத்தலால் ஏற்படும் தீமைகள், புகைப்பொருள் நிறுவனங்களின் விளம்பர நுட்பங்கள், புகைப்பொருள் பாவனை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் போன்றவை தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதனை நோக்காகக் கொண்டு, ஆண்டுதோறும் மே 31 ஆம் திகதி சர்வதேச புகைத்தல் தடுப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
உலகெங்கிலும் தங்கள் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமையைக் கோருவதும், எதிர்கால சந்ததியினரைப் பாதுகாப்பதுமே இதன் பிரதான நோக்கமாகும்.
உலக சுகாதார ஸ்தாபனமானது 2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச புகைத்தல் தடுப்பு தினத்திற்கான உலகளாவிய பிரசாரத்தை ‘புகைப்பொருள் நமது சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல்’ என்ற கருப்பொருளின் கீழ் அறிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, புகைப்பொருள் பாவனையினால் உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 மில்லியன் மக்கள் மரணிக்கின்றனர். புகையிலைப் பொருட்கள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதுடன் ஒரு நாட்டிற்குள் சுகாதார பிரச்சினைகளுக்கு பெரிதும் பங்களிக்கின்றன.
இலங்கையில் கடந்த தசாப்தத்தில் 35,000 மில்லியனுக்கும் அதிகமான சிகரெட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிகரெட் துண்டுகள், உணவுப் பொதிகளுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது அதிக குப்பைகள் நிறைந்த பொருளாக விளங்குகின்றன. மேலும் பல நச்சு இரசாயனங்கள், கன உலோகங்கள் மற்றும் எஞ்சிய நிகோட்டின் ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் இவை பெரிதும் சூழலுக்கு பாதிப்பை தோற்றுவிக்கின்றன.
அவை மிகக் குறைந்த உக்கும் தன்மையும் கொண்டவை. எனவே, சிகரெட் துண்டுகளை முறையற்ற முறையில் ஆங்காங்கே இடுவது பெரும்பாலும் காற்று, நிலம் மற்றும் நீர் மாசுபடுவதற்கு பங்களிக்கிறது. பயனுள்ள கொள்கை அமுலாக்கத்தின் மூலம் புகையிலைப் பாவனையைக் கட்டுப்படுத்துவதில் ஒரு நாடாக இலங்கை வெற்றியடைந்துள்ளது.
இதன் விளைவாக கடந்த தசாப்தத்தில் புகையிலை பாவனையானது கணிசமாகக் குறைந்துள்ளது. இலங்கை, குறைந்த புகைப்பொருள் பாவனையில் முன்னணி நாடாகத் திகழ்கிறது, இது நாட்டிற்குள் நடைமுறைப்படுத்தப்பட்ட புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க வெற்றியைக் குறிக்கிறது. இத்தகைய சாதனையுடன், புகைப்பொருள் பயன்பாட்டை மேலும் குறைப்பதற்கும், அதன் மூலம் நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு மீதான சுமையைக் குறைப்பதற்கும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இலங்கையில் கணிசமான அளவு குறைந்த புகையிலை பாவனை வீதங்கள் பதிவாகியுள்ள போதிலும், பல காரணங்களால் மேலும் புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமுல்படுத்த வேண்டியுள்ளது. இலங்கையில் சிகரெட்டுக்காக நாளாந்தம் சுமார் 40 மில்லியன் ரூபா செலவிடப்படுவதால் அது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.
புகைப்பொருளானது பாவனையாளர்களிடத்தில் பல நோய்களை ஏற்படுத்துவதால், அது நாட்டின் சுகாதார அமைப்பிலும் தேவையற்ற சுமையை சேர்க்கிறது.
கடந்த காலங்களில், புகையிலை பாவனையை கட்டுப்படுத்த இலங்கை பல முக்கியமான சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது, வரி அதிகரிப்பு உட்பட, அரசாங்கத்திற்கான குறிப்பிடத்தக்க வருமானத்தை அதிகரிப்பதற்கும் பொதுமக்களுக்கான பொது சுகாதார நலன்களுக்கும் வழிவகுத்தது.
2019 ஆம் ஆண்டு முதல் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காததால் நாடு மிகவும் நெருக்கடியான காலப்பகுதியில் அரசாங்கத்திற்கு ஈட்டக்கூடிய வருமானம் சுமார் 100 பில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 2021 இல் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) நடத்திய ஆய்வில், பதிலளித்தவர்களில் 89.3 வீதம் பேர் அரசாங்க வருவாயை மேம்படுத்த புகையிலை வரியை அதிகரிக்கும் நடவடிக்கையை ஆதரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். புகைபிடித்தல் ஒரு ஒரு சமூகத்தின் பொருளாதார நிலைக்கு நேரடியாக தாக்கம் செலுத்துவதனால், விரிவான புகையிலை கட்டுப்பாட்டு உத்திகளில் புகையிலை வரிவிதிப்பு இன்றியமையாத அங்கமாகும்.
புகைபிடித்தல் மற்றும் அதன் பாதகமான உடல்நல விளைவுகளையும் குறைக்க இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிகரித்த வரிவிதிப்பின் மூலம், விலைகளை அதிகரிப்பதன் மூலம் புகையிலை பாவனையை குறைப்பதானது புகையிலையால் ஏற்படும் நோய்களை குறைக்கும் மற்றும் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பு முறை மிகவும் சுமையாக உள்ள நேரத்தில் சுகாதார அமைப்பின் மீதான அழுத்தத்தை குறைக்கும்.
எனவே, இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் செயற்படுத்தப்பட வேண்டிய சிறந்த உத்தி, சிகரெட்டுக்கான வரியை அதிகரித்து அரசாங்கத்திற்கு அதிகூடிய வருமானத்தைப் பெற்றுக் கொடுப்பதாகும்.
நிதர்சனா செல்லத்துரை