நுவரெலியா-உடப்புஸ்ஸலாவை பிரதான வீதியின் போக்குவரத்து தடை

0
132

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா-உடப்புஸ்ஸலாவை பிரதான வீதியின் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா பொரலந்தை சிறிய நகரத்தில் அமைந்துள்ள லாப்கேஸ் நிறுவனத்திற்கு சமையல் எறிவாயு நிரப்பிய சிலின்டர்களை ஏற்றி வந்த 40 அடி நீளம் கொண்ட பார ஊர்தி நடுவீதியில் இயந்திர கோளாறுக்குள்ளாகியுள்ளதால் இந்த போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

(31) மாலை மூன்று மணியலவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின்
காரணமாக பொரலந்தை சிறிய நகர பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில் நுவரெலியா தொடக்கம் கந்தப்பளை,இராகலை ,வலப்பனை, உடப்புசலாவை நோக்கி பயணிக்கும் பயணிகளும், வாகனங்களும் ,உடப்புஸ்ஸலாவை தொடக்கம் நுவரெலியாவை நோக்கி பயணிக்கும் வாகனங்களும் பொரலத்தை பகுதியில் நீண்ட வரிசையில் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

இந்த வாகன கோளாறு காரணமாக நுவரெலியா-உடப்புசலாவை பிரதான வீதியில் சுமார் இரு திசைகளிலும் சுமார் ஒன்றரை கிலோமீட்டருக்கு அதிகமான தூரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த பாரிய வாகன போக்குவரத்து தடை காரணமாக கந்தப்பளை பகுதியிலிருந்து ஆவா எளிய பொது மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பூதவுடல் ஏந்திய மலர்ச்சாலை ஊர்தி வாகனமும் பொரலந்தை நகரத்தை கடந்து செல்ல முடியாது நிறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் வலப்பனை நீதிமன்றத்திலிருந்து நுவரெலியா சிறைச்சாலைக்கு கைதிகளுடன் வருகை தந்த சிறைச்சாலை வானமும் வீதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இப் பிரதான வீதி ஊடாக உடப்புசலாவை,வலப்பனை,இராகலை,கந்தப்பளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இருந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு (31) மாலை வருகை தந்தவர்களும் வாகன போக்குவரத்து தடை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் பொரலந்த சிறிய நகரில் உள்ள லாப்கேஸ் முகவர் நிறுவனத்திற்கு சமையல் எரிவாயு ஏற்றி வரும் நீண்ட அடி கொண்ட வாகனம் பிரதான வீதியில் இருந்து நிறுவனத்திற்கு உள்ளே செல்வதற்கு இட வசதி போதாமையினால் இவ்வாறான இடையூறு பலமுறை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

-ஆ.ரமேஸ்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here